வலுக்கட்டாயமாக மிரட்டி முறையற்ற வழியில் கடன் வசூலித்தால் 5 ஆண்டு சிறை: கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி; புதிய மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக மிரட்டி, கடனை வசூலிக்க முறையற்ற வழியை நாடினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார். அதில் இருப்பதாவது: பணக்கடன் வழங்குபவர்கள் மற்றும் அடகு கடைகளின் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியில் இருந்து மக்களை காப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழ்நாடு அடகு கடைக்காரர்கள் சட்டம்-1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குபவர்கள் சட்டம் – 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச்சட்டம் – 2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது.

என்றாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர் குறிப்பாக விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள், பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், கட்டிட பணியாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் பணக்கடன் வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்படும் கவர்ச்சிகரமான கடன்களுக்கு இரையாகி, கடும் கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.
மேலும், பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கனவே நிதிச்சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடனை வசூலிப்பதற்காக முறையற்ற வழியை நாடுகின்றனர். இதனால் சில சமயங்களில் கடனாளிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு தூண்டுகிறது. அதன்மூலம் பலரது குடும்பங்களை அழித்து, சமூக ஒழுங்கை பாதிப்படைய செய்துவிடுகிறது.

எனவே, தனிநபர் அல்லது தனி நபர்கள் உதவிக் குழுக்கள் அல்லது கூட்டு பொறுப்பு குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் இன்னல்களில் இருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கி நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றுவது அவசியமாக கருதப்படுகிறது. அதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளதற்கு ஏற்ப, அதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த சட்டம், வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் கடன் வாங்கியவரிடம் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால், இந்த வங்கிகளுக்கும், பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்களுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.

கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்த கூடாது. அந்த வகையில், அவர்களுக்கு இடையூறு விளைவித்தல், வன்முறையை பயன்படுத்துதல், அவமதித்தல், மிரட்டுதல், அவர்கள் போகுமிடங்களில் பின்தொடர்தல், அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துகளை பறித்துக் கொள்ளுதல், அவரது வீடு, வசிக்குமிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்கு செல்வது, பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்த தனியார் அல்லது வெளித்தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துதல், அரசு திட்டத்தின் கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள், வீட்டு உடைமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருதல் போன்றவை வலுக்கட்டாய நடவடிக்கைகளாக கருதப்படும்.

மிரட்டுதல், பின் தொடருதல் போன்ற குற்றங்களை செய்தால், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். வெளி முகமைகளை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அது கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்படும்.

கடன் வழங்கும் நிறுவனம் தொழில் நடத்த விரும்பும் மாவட்டம் அல்லது வட்டாரத்தில் பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவத்தை அளித்து பதிவு செய்ய வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.
கடன் வழங்கும் நிறுவனம் ஒவ்வொன்றும், பதிவு செய்துள்ள நிறுவனத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும். பதிவுச் சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அந்த நிறுவனம் கடனுக்கான வட்டி வீதம், அலுவலக விவரங்கள், வலைதளம், தகவல் தொகுப்பு ஆகியவற்றை சிறிய புத்தகம் அல்லது விளம்பர அறிவிப்புகளில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* கடன் வசூலிக்க வெளி முகமைகளை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
* கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அது கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்படும்.

The post வலுக்கட்டாயமாக மிரட்டி முறையற்ற வழியில் கடன் வசூலித்தால் 5 ஆண்டு சிறை: கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி; புதிய மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: