நேஷனல் ஹெரால்டு வழக்கு குற்றப்பத்திரிகையில் போதிய ஆவணங்கள் இல்லை: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை 2014ம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து 2015ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 13ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பெயரும் அதில் அமலாக்கத்துறை இணைத்துள்ளது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக நோட்டீஸ் எதுவும் தற்போது பிறப்பிக்க முடியாது.

ஏனெனில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் போதிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை. முதலில் விடுபட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். அதன் பின்னர் அதனை ஆய்வு செய்து முடிவெடுக்கலாம். எந்த ஒரு உத்தரவாக இருந்தாலும் அதில் குறைபாடு உள்ளதா என்று நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். அது எங்களது முக்கிய கடமை ஆகும். எனவே இந்த வழக்கில் நாங்கள் அதாவது நீதிமன்றம் திருப்தி அடைவதற்கு முன்னதாக நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக நீதிபதி தெரிவித்தார்.

The post நேஷனல் ஹெரால்டு வழக்கு குற்றப்பத்திரிகையில் போதிய ஆவணங்கள் இல்லை: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: