சென்னை: தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கண் பாதிப்புக்கு ‘பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்’ மூலம் ஆண்டுக்கு சராசரியாக 3 லட்சம் மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் ஆன்லைன் கல்வி முறை ஏராளமான மாணவர்கள் மற்றும் கல்வி நிலையங்களின் எதிர்காலத்தை காப்பாற்றியுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்த கல்வியாண்டு முழுவதும் மாணவர்களின் படிப்பு வீணாவதைத் தடுத்து, ஆன்லைன் மூலம் தொடர்ந்து கல்வியை அளிக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்ெகாண்டன. அன்று முதல் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இடையே செல்போன், லேப்டாப் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது, உடல் செயல்பாடு குறைய தொடங்கியது.
இதனால் அவர்களின் கண்களில் கோளாறு ஏற்பட்டு பெற்றோர் அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, அவர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் டி.வி முன் அமர்ந்து பல மணி நேரம் தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சலும், கண்களில் நீர்வடிவதும் அதிகரித்து இருப்பதாக பெற்றோர் கூறினர். பள்ளிகளில் கிட்டப்பார்வை குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள், எழுத்துகளும், தூரப்பார்வை காரணமாக கரும் பலகையில் இருக்கும் எழுத்துகளை சரியாக பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டது. வசதி உள்ள பெற்றோர் அவர்களது பிள்ளைகளை தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்’ தற்போது அந்த மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பார்வை குறைவுக்கு தொடக்கத்திலேயே கண்ணாடி போடாவிட்டால் நாளடைவில் கண் பாதிப்பு அதிகரிக்கும். அதற்குப் பின் கண்ணாடி போட்டாலும் பார்வை முழுமையாக கிடைக்காது. பார்வை பாதித்துவிட்டால் மாணவர்கள் படிக்க முடியாமல் கல்வி வெகுவாக பாதிக்கப்படும், எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்ற எண்ணத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் இந்த திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டம் மூலம் 6 முதல் 12 வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் சராசரியாக 3 லட்சம் மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021-22ம் ஆண்டு 1.61 லட்சம் மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது, இது, அடுத்த ஆண்டே 2.14 லட்சம் மாணவர்களாக அதிகரித்தது. கடந்த 2024-25ம் ஆண்டும் 2.87 லட்சம் மாணவர்கள் இலவசமாக கண்ணாடிகள் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட ஆசிரியர்கள், மாணவர்களை தூரத்தில் உள்ள எழுத்துகள் தெரிகிறதா, வண்ணங்கள் சரியாக தெரிகிறதா, கண்ணின் மையத்தின் கரும்புள்ளிகள் இருக்கிறதா, கண்ணாடி அணிந்திருக்கிறாயா, இல்லையா உள்ளிட்ட கேள்விகளுடன் பரிசோதிப்பார்கள்.
அதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாராமெடிக்கல் உதவி கண் மருத்துவர் மூலம் முழுமையான கண் பரிசோதனை மேற்கொண்டு, அந்த மாணவனுக்கு ஏற்ற கண்ணாடியை மருத்துவர்கள் வழங்குவார்கள்.
வெளியில் ஒரு கண்ணாடி ரூ.2000க்கு மேல் விற்கப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு இந்த திட்டம் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் கண்ணாடிக்கு டெண்டர் விடப்பட்டு ஒரு கண்ணாடி ரூ.236க்கு வாங்கப்படுகிறது. ‘பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்’ மூலம் பயன்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தால் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பயனடைகின்றனர்.
அதில் பாதிப்பு உள்ள மாணவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் அவர்களுக்கு ஏற்ற கண்ணாடி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே கண்ணாடி வழங்கப்பட்டு இருக்கும் மாணவர்களுக்கு அதற்கு அடுத்த ஆண்டு கண் பாதிப்பில் மாறுதல் இருந்தால் அதற்கு ஏற்றவாறு வழங்கப்படும். அதிக நேரம் மொபைல் அல்லது லேப்டாப் பார்த்த காரணத்தால்தான் இந்த அதிகரிப்பு இருக்கலாம். அதுமட்டுமின்றி தற்போதைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மொபைல் பயன்படுத்துகின்றனர். அது கண்ணுக்கு நல்லதில்லை. மேலும் பார்வை குறைவு ஏற்படாமல் தடுக்கவும் ஏற்கனவே பார்வை குறைவு உள்ளவர்களுக்கு லென்ஸ் பவர் அதிகரிக்காமல் இருப்பதற்கும் பிள்ளைகளை அடிக்கடி வீட்டுக்கு வெளியே வெயிலில் விளையாடச் பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் கண்ணுக்கு ஏற்ற சத்தான உணவு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கண் பார்வையை மேம்படுத்தும் உணவுகள்
கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியம். கேரட், கீரைகள், மாம்பழம், பப்பாளி போன்ற பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் க்ரீம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல பாதாம், வால்நட், ராஜ்மா, ஓட்ஸ் ஆகிய கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மேலும் டூனா, கானாங்கெளுத்தி மீன், ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட் ஆகிய ஒமேகா 3 உள்ள உணவுப் பொருட்களும் கண் பார்வையை மேம்படுத்தும்.
The post பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 3 லட்சம் மாணவர்களுக்கு இலவச கண்ணாடி: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.