கோடை சீசன் துவங்கிய நிலையில் வழிகாட்டி பலகைகளை புதுப்பிக்க வேண்டும்

குன்னூர், ஏப்.23: தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வது வழக்கம்.  அங்கு நிலவி வரும் குளிச்சியான கால நிலை, இயற்கை காட்சிகள், சுற்றுலா இடங்கள் ஆகியவற்றை பார்வையிட விடுமுறை காலங்கள், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக நீலகிரிக்கு கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் 10 லட்சம் பேரும், ஆண்டு முழுவதும் 30 லட்சம் பேரும் வந்து செல்கின்றனர். இப்படி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தங்களது சொந்த வாகனங்களில் வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள், தங்கள் செல்ல வேண்டிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சாலை ஓரம் நின்று வழி கேட்கின்றனர்.

இப்படி சாலையில் வாகனங்களை நிறுத்தி வழி கேட்பதால் சில இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி பெயர் பலகைகளை நெடுஞ்சாலை துறையினர் புதுப்பித்தால் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாது என்று வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர். மேலும் சில பகுதிகளில் வழிகாட்டி பெயர் பலகைகள் பராமரிக்க தவறியதால் அழுக்கு படிந்த நிலையில் உடைந்து காணப்படுகின்றன. கோடை சீசனை முன்னிட்டு குன்னூர் – மேட்டுப்பாளையம் செல்லும் சாலை மே மாதம் 1-ம் தேதியில் இருந்து ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் குன்னூரில் இருந்து சில சிறிய ரக வாகனங்கள் வண்டிச்சோலை, அளக்கரை வழியாக செல்வார்கள்.

ஆனால் வண்டிச்சோலை அருகே வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி பெயர் பலகை மாசடைந்த நிலையில் உடைந்து காணப்படுகிறது. இதனால் புதிதாக அந்த சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் வழி தெரியாமல் பெரும் சிரமத்தை சந்திக்கக்கூடும் என்பதால் இந்த வழிகாட்டி பலகையை மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் மாசு படிந்த, மங்கிய பெயர் பலகைகளை புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

The post கோடை சீசன் துவங்கிய நிலையில் வழிகாட்டி பலகைகளை புதுப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: