சென்னை: கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதி இளந்திரையன், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வைத்திருக்கின்ற கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென கடந்த 27.1.2025 அன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை 19(1)(ணீ) மற்றும் 19(1)(நீ) சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிரானது. நீதிமன்றத்திற்கு குறிப்பிட்ட விஷயம் குறித்து சட்டம் இயற்ற வேண்டுமென உத்தரவிட அதிகாரமில்லை.
அது அரசின் நிர்வாக அதிகாரம் என்கிற சட்டப்பூர்வமான கருத்துக்களை கணக்கில் கொள்ளாமல் போடப்பட்ட உத்தரவு. கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளை பிரதிபலிக்கின்ற அடையாள சின்னம். கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு போடுவதற்கு முன் எங்கள் தரப்பு நியாயத்தை கேட்கவில்லை. எனவே மேற்கண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஏற்கனவே ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 6.3.2025 அன்று தள்ளுபடி செய்ததை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற தடையாணை உத்தரவு பிறப்பிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
The post கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் மேல்முறையீடு appeared first on Dinakaran.