கனிமவள வரியை குறைக்கக்கோரி நடந்த வேலைநிறுத்தம் வாபஸ் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி யூனிட்டுக்கு ரூ.1,000 உயர்வு: கல்குவாரி, கிரஷர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: கனிமவள வரி விதிப்பை குறைக்கக் கோரி நடத்தி வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி இன்று முதல் யூனிட்டுக்கு ரூ.1,000 உயர்த்தப்படும் என்று கல்குவாரி, கிரஷர் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கனிமவள வரி விதிப்பை குறைக்க கோரி கல்குவாரி, கிரஷர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களை அமைச்சர் துரைமுருகன் நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளதாக சங்கத்தினர் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, கல்குவாரி, கிரஷர் சங்கத்தின் தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 4ம் தேதி வரி விதித்துள்ளனர். வரி அதிகமானதால் தொழில் செய்வது சிரமமாக இருந்தது. அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வேலை நிறுத்தம் செய்தோம். அப்போது அரசிடம் கேட்டபோது எதற்காக வரி விதிக்கப்பட்டது என்ற நியாயமான காரணங்களை அமைச்சர், அதிகாரிகள் கூறினர். அதை உடனடியாக குறைக்க முடியாது, அதற்கு சில காலஅவகாசம் தேவைப்படும் என்றனர். எந்த அளவிற்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதோ, அந்த அளவுக்கு நாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு விலையை உயர்த்தி விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

அதன்படி, இன்று முதல் எம்.சாண்ட, பி.சாண்ட், ஜல்லி போன்ற பொருட்கள் விலை உயர்த்தப்படும். எனவே விலை உயர்வை பொறுத்துக் கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு யூனிட்டுக்கு ஒவ்வொரு பொருட்களுக்கும் ரூ.1,000 உயர்த்தப்படும். அதன்படி ஜல்லி ரூ.4,000க்கு விற்பனை செய்தது ரூ.5,000 ஆகவும், எம்.சாண்ட் ரூ.6,000, பி.சாண்ட் ரூ.7,000 என ஒவ்வொரு பொருட்களுக்கும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.1,000 உயர்த்தப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து கட்டுமான அசோசியேனுடன் கலந்து பேசி பிரச்னைகளை சுமுகமாக முடித்துக் கொள்வோம். மேலும் பேச்சுவார்த்தை சுமுகமாக வெற்றிகரமாக முடிந்தது. அதற்காக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வேலை நிறுத்தமும் வாபஸ் பெற்றுள்ளதால் அனைத்து கல்குவாரி, கிரஷர்கள் இன்று முதல் செயல்படும். இவ்வாறு கூறினார்.

அரசுக்கு நன்றி: சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகள் தொடர்பாக சந்தித்தனர். அப்போது இயற்கை வளங்கள் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சரவணவேல் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். கல்குவாரிகளுக்கு வழங்கப்படும் உரிமங்களுக்கான கால நீட்டிப்பு மற்றும் குவாரிகள் கலவை தொடர்பான அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன. எஸ்இஐஏஏ தொடர்பான முக்கிய கோரிக்கைகளான நிலத்தடி நீர்மட்டம் வரை குவாரி செய்வது, மொத்த உற்பத்தி அளவில் ரூ.50 வரை ஓராண்டில் உச்ச உற்பத்தி செய்வது, 2வது முறையாக மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்று தேவையில்லை போன்றவற்றை பரிசீலித்து முடிவு செய்த எஸ்இஐஏஏ உறுதி செய்துள்ளது என்றும் இதர கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பாக சங்கத்தினர் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post கனிமவள வரியை குறைக்கக்கோரி நடந்த வேலைநிறுத்தம் வாபஸ் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி யூனிட்டுக்கு ரூ.1,000 உயர்வு: கல்குவாரி, கிரஷர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: