* பணிகளை துரிதப்படுத்தியது ‘டிட்கோ’
ஒன்றிய அரசு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில், புதிய விமான நிலையங்களை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் இரண்டாவது விமான நிலையமும், விரைவில் ஓசூர் மற்றும் இன்னும் சில ஆண்டுகளில், தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்கள் பலவற்றிலும் விமான நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விமான சேவை பலமடங்கு அதிகரிக்க உள்ளதால், விமானத்தை இயக்கும் விமானிகளின் தேவையும் அதிகரிக்கும். இந்தியாவில் சர்வதேச தரத்தில் விமானத்தை இயக்க பயிற்சி அளிக்கும், விமான பயிற்சி நிறுவனங்கள் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து பலரும் விமான பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இதற்காக அதிகம் செலவிட நேரிடுகிறது.
இதை தவிர்க்கவும், விமான பயிற்சி நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க 50 வகையான தனித் திறன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி மையம் அமைக்கும் திட்டமும் ஒன்று. இந்தியாவிலேயே விமான பயிற்சிக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால், இங்கு அரசு சார்ந்த விமான பயிற்சி நிலையம் இல்லை. இந்தக் குறையை போக்குவதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், விமானி பயிற்சிக்கான மையம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் தோணுகால் ஊராட்சி பகுதியில் ஏற்கெனவே லட்சுமி ஆலை நிர்வாகத்தினர் அரசு நிலத்தை ஒப்பந்த அடிப்படையில் பெற்று விமான ஓடுதளம் அமைத்து பயன்படுத்தி வந்த இடம், தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. தனியார் ஆலை நிர்வாகத்தினர் முறைப்படி அந்த நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைத்து விட்டதால், அதில் விமான பயிற்சி மையம் அமைக்க ஏதுவாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் கருத்துரை சமர்ப்பித்தார். மேலும், பயிற்சி மையம் அமைக்க தேவையான சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. அதனால் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அருகேயே இருப்பதால் விமான பயிற்சிக்கு ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திட்ட இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டை மலை அடிவாரத்தில் உள்ள விமான ஓடுதள பாதையை ஆய்வு செய்தனர். இந்த ஓடுதளம் கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில், அடிப்படையான பழுதுபார்த்தல் மூலம் இந்த ஓடுதளத்தை பயன்படுத்த முடியும். இதனை சீரமைப்பதன் மூலம் பயிற்சி விமான நிலையமாக்க முடியும் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து கோவில்பட்டி விமான ஓடுபாதையில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மாஸ்டர் பிளான், விரிவான பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளுக்கான ஆலோசகர்கள் தேர்வு டிட்கோ சார்பாக டெண்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இங்குள்ள ஓடுதளத்தை பயன்படுத்தி, 10 பயிற்சி விமானங்களை இயக்கலாம். இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை, ‘டிட்கோ’ செய்து தர உள்ளது. இதற்காக டெண்டர் வெளியிடப்பட்டதும் பல நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. தற்போது, விமான ஓடுதளம் போன்றவற்றுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்கும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியிலும், டிட்கோ ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விமான பயிற்சி நிலையத்தை, ஜூனுக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் வாயிலாக, சர்வதேச தரத்தில் விமான பயிற்சி, தமிழகத்திலேயே வழங்கப்படும்,’’ என்றார். தமிழ்நாடு அரசு சார்பாக தென் தமிழகத்தில் விமான பயிற்சி மையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி உள்ளது அந்த பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு துரித நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமான கோவில்பட்டி, நூற்றுக்கணக்கான தீப்பெட்டி ஆலைகள், கடலை மிட்டாய், பட்டாசு, விவசாயம், நூற்பு ஆலைத்தொழில்கள் நிறைந்த பகுதியாகும். இவை தவிர ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார், அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளும் அதிகம் உள்ளன. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி நகரின் தொழில் வளர்ச்சியை மேலும் பெருக்கும் விதமாக நாலாட்டின்புத்தூர், தோணுகால் கிராமங்களில் மொட்டைமலை அடிவாரத்தில் சுமார் 1.2 கிலோ மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் உள்ள மிகப்பழமையான விமான ஓடுதளத்தை சீரமைத்து விமான பயிற்சி மையம் உருவாக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொழில், வியாபார வளர்ச்சிக்கு உதவும்
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் கூறும் போது, ‘தமிழகத்தில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், காணாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும். மீதமுள்ளவை ஏஏஐ அல்லது இந்திய ஆயுதப்படைகளால் பயன்படுத்தப்படுகின்றன. கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம் ஆகியவை இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் உள்ளன. கோவில்பட்டி அருகே விமானப்படை பயிற்சி தளம் அமையவிருப்பது இப்பகுதியில் தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நிலம் மற்றும் வீடுகளின் மதிப்புகளும் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே தூத்துக்குடியில் உள்ள துறைமுகம் சிறப்பாக செயல்பட்டு தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கிறது. இந்த வரிசையில் விமானப்படை பயிற்சி தளம் அமைய இருப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்’ என்றார்.
தென் மாவட்ட மாணவர்களுக்கு வரப்பிரசாதம்
முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி கூறுகையில், ‘கோவில்பட்டியில் உள்ள விமான ஓடுதளத்திற்கு ஏற்கெனவே விஓ26 என்ற ஜிபிஎஸ் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போதும் இந்த குறியீடு நடைமுறையில் உள்ளது. கோவில்பட்டி விமான ஓடுதளம் சீரமைக்கப்பட்டு விமான பயிற்சி மையம் நிறுவப்படுவது தென்மாவட்ட மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். ஓடுதளம் செயல்பாட்டுக்கு வரும் போது சிறிய ரக விமானங்கள் அடிக்கடி இங்கு வந்து செல்லும்’ என்றார்.
விமான நிலையமாக மாற வாய்ப்பு
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், ‘கோவில்பட்டி விமான பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இப்பகுதியில் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். சென்னை-கன்னியாகுமரி வரையிலான தேசிய 4 வழிச்சாலையில் திருச்சி, மதுரைக்கு அடுத்தபடியாக விமான நிலையம் வேறு எங்கும் இல்லை. தற்போது பயிற்சி நிறுவனத்துக்காக செயல்பாட்டுக்கு வரும் கோவில்பட்டி விமான ஓடுதளம், நாளடைவில் விமான நிலையமாக மாறவும் வாய்ப்பு கிடைத்தால் இப்பகுதி மேலும் செழிக்கும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.
இந்தியாவின் தேவை இங்கு நிறைவேறும்
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1,500 விமான ஓட்டிகள் தேவைப்படுகின்றனர். ஆனால், சுமார் 600 பேர் தான் இந்தியாவில் பயிற்சி முடித்து பணிக்கு வருகின்றனர். மற்ற அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான். எனவே இப்பகுதியில் விமான பயிற்சி மையம் அமையப்பெற்றால் தமிழகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து விமான பயிற்சி பெற மாணவர்கள் வருவார்கள். அவர்களுக்கு குறைந்தது 18 மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும். இதனால் இப்பகுதியில் பொருளாதாரம் மேம்படும். இந்த விமான பயிற்சி மையத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழக மாணவர்களின் விமான பைலட் கனவு நினைவாகும். மேலும், விமான பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும்.
The post வெளிநாடுகளுக்கு சென்று ‘பைலட்’ பயிற்சி பெறுவதை தவிர்க்க கோவில்பட்டியில் சர்வதேச தரத்தில் விமான பயிற்சி மையம்: ஜூனுக்குள் செயல்படுத்த நடவடிக்கை appeared first on Dinakaran.