* தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் மாணவர்கள் மோதல் சிறார் குற்றவாளிகள்
* நஞ்சை விதைக்கும் செல்போன், கவனிக்க தவறும் பெற்றோர்
செல்போன்களின் மூலம் பரவும் விபரீத விஷம் இன்றைய இளைய தலைமுறையினரின் மனதில் பகீர் எண்ணங்களை விதைக்கிறது. யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், முகநூல் என பெருகிவிட்ட சமூகவலைதளங்களில் சிலர் தங்களது ஜாதிய பெருமைகளையும், வீர தீர சூர பராக்கிரமங்களையும் தங்கள் கண்ணோட்டத்தில் பதிவிடுகின்றனர். சினிமாவில் வருவது போன்ற அவர்களது வீடியோவை பார்க்கும் மாணவர்கள் மனதிலும் அதே விஷ விதை முளைத்து பல இளம் குற்றவாளிகளை உருவாக்குகிறது.
சமூக வலைதளங்களில் ரவுடிகள் வெளியிடும் வீடியோக்களை பார்க்கும்போது, அவர்கள் செய்த செயல்களையே தாங்களும் செய்ய நினைக்கும் சிலர் அதை பள்ளி, கல்லூரிகளில் அரங்கேற்றுகின்றனர். இதனால் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு தென்மாவட்டங்களை ஜாதிய அடையாள சங்கிலிக்குள்ளேயே கட்டி வைக்கின்றது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சின்னத்துரை என்ற மாணவர் வீடு புகுந்து வெட்டப்பட்டார். அதை தடுக்க முயன்ற அவரது சகோதரியும் தாக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த மாதம் ஸ்ரீவைகுண்டத்தில் ஓடும் பஸ்சில் மாணவர் வெட்டப்பட்டார். ஜாதிய ஆதிக்க மணப்பான்மை மாணவர்களிடம் வளர்ந்ததால் நடந்த மோதல்கள் கல்வித்துறையை கலங்கடித்த நிலையில் கடந்த 15ம் தேதி நெல்லையில் 8ம் வகுப்பு மாணவர் வகுப்பறையில் வைத்தே சக மாணவரை வெட்டினார். தடுக்க வந்த ஆசிரியையும் வெட்டப்பட்டார். செல்போனில் வீடியோக்களை பார்த்து விட்டு அதுபோல் நண்பரை தாக்கி விட்டதாக போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார் தாக்குதலில் ஈடுபட்ட அந்த மாணவர்.
இதேபோல் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை நெல்லையில் சமூக வலைதள நண்பரை நம்பி வந்த இடத்தில் சில நாட்களுக்கு முன் மீண்டும் தாக்கப்பட்டார். கடந்த வாரம் நெல்லை டவுனில் காதல் விவகாரம் தொடர்பான கொலை வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைதாகினர். கடந்த 10ம் தேதி நெல்லை அருகே 8 வயது சிறுவனிடம் அத்துமீறிய பதின்பருவ சிறுவர்கள் 3 பேர் மீது போக்சோ சட்டம் பாயந்தது. கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் பள்ளி மாணவிகளை கத்தியைக் காட்டி மிரட்டி இன்ஸ்டாகிராம் ஐடி கேட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதே மார்ச் மாதம் 6ம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியில் மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்தாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான். அதே மாதத்தில், நெல்லை அருகே ஒரு கிராமத்தில் 5 வயது சிறுமியிடம் 13 வயது சிறுவன் அத்துமீறிய அவலம் நடந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 8 வயது சிறுமி ஒருவர் 5 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் செல்போனில் ஆபாசப் படங்கள் பார்த்த பிறகு இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இதேபோன்று அதே ஆண்டில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் செல்போனில் ஆபாசப் படங்களைப் பார்த்த 4 சிறுவர்கள் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டன. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 167பி-யின் படி சிறுமிகளின் ஆபாச படங்கள் உருவாக்குவது, பதிவிறக்கம் செய்வது, பகிர்வது குற்றம் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பின் மூலம் மீண்டும் தெளிவாக்கியது.
ஏற்கனவே 2019ல் திருத்தப்பட்ட போக்சோ சட்டத்தில் அதிகப்பட்சமாக மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டம் கடுமையாக்கப்பட்டது. என்னவாகி விட்டது மாணவர்களுக்கு? பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைத்தது எது? செல்போனின் மாய உலகத்திற்கு அடிமையாகி விட்டதுதான் காரணம்! என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். காலையில் எழுந்தவுடன் கையில் செல்போன், இரவில் தூங்கும் வரை செல்போன். விளையாட மைதானம் செல்வதில்லை, பேச நண்பர்கள் இல்லை, படிக்க புத்தகங்கள் இல்லை. இருப்பது எல்லாம் அந்த சிறிய மாயாஜால செல்போன் திரையில் குழந்தைகளின் விரல்.
ஆனால், இந்த மாயாஜாலம் குழந்தைகளின் வாழ்க்கையை இருளாக்கிடும் விஷம் என்பதை பல பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். உடல் ரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகவும் குழந்தைகள் சிதைந்து கொண்டிருக்கிறார்கள். தனிமை, பதட்டம், கோபம், விரக்தி என்ற வார்த்தைகளை இன்று பல சிறுவர்கள் சாதாரணமாக உச்சரிப்பதை பார்க்க முடிகிறது. வன்முறைக் காட்சிகள் நிறைந்த விளையாட்டுகளும், வயதுக்கு மீறிய தகவல்களும் அவர்களின் இளம் மனதை அரித்து, அவர்களை மெல்ல மெல்ல குற்றவாளிகளாக்குகின்றன.
அந்தப் பிஞ்சு வயதில் எதை பார்க்கக் கூடாதோ, எதை நினைக்கக் கூடாதோ அதையெல்லாம் அவர்கள் எளிதாக பார்த்து விடுகிறார்கள். குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது ஒரு சமூக வியாதி. இது அவர்களின் உடல் நலனையும், மன நலனையும் மட்டுமல்ல, அவர்களின் எதிர்காலத்தையே சீரழித்து விடும். கண் பார்வை குறைபாடு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, அவர்களின் சிந்தனைத் திறன் மழுங்கி, உணர்ச்சிகள் மரத்துப் போக வைத்து விடுகின்றன.
வன்முறையை சகஜமாக நினைக்கத் தொடங்கி, அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்கக்கூட அவர்களுக்குத் தோன்றவிடாமல் செய்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள். படிப்பு, விளையாட்டு, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து செல்போன் பயன்பாட்டிற்கு நேரத்தை வரையறுப்பது ஒன்றே முதல் தீர்வு எனக்கூறும் மருத்துவ உலகம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உலகத்தை அறிமுகப்படுத்துங்கள் என்கிறது.
* மனநோயாளிகளாக மாற்றுகிறது செல்போன்
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனவளத்துறை தலைவர் ரமேஷ் பூபதி கூறியதாவது: ஒரு முறை நான் சலூனுக்குச் சென்ற போது அங்கு ஒரு குழந்தைக்கு முடி வெட்ட கடைகாரர் முயன்று கொண்டிருந்தார். அந்த குழந்தை அடம் பிடித்துக் கொண்டிருந்தது. அந்த குழந்தையின் தாய் ஒரு செல்போனை கையில் கொடுத்ததும் குழந்தை அமைதியாகி முடி வெட்ட சம்மதம் தெரிவித்தது. முடிவெட்டும் வரை அந்த குழந்தை செல்போனில் இருந்து தனது கவனத்தை திசை திருப்பவில்லை. குழந்தையின் இந்த செயல் இன்று வேண்டுமானால் நன்றாக இருக்கும்.
இதன் அடுத்தக்கட்டம் அவர்களது வாழ்க்கையையே சூன்யமாக்கிவிடும். முதலில் பெற்றோருக்கென சில கடமைகள் உள்ளன. அவர்களிடம் நான் கூறுவது என்னவென்றால், குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கவனியுங்கள். நல்ல விஷயங்களுக்காக மட்டுமே செல்போனை பயன்படுத்த கற்றுக் கொடுங்கள். அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள். இசை, நடனம், ஓவியம் என அவர்களின் திறமைகளை வளர்க்க உதவுங்கள்.
இந்த செல்போன் என்ற மாய அரக்கனிடம் இருந்து அவர்களை விடுவித்து, ஒரு வளமான, அழகான எதிர்காலத்தை அவர்களுக்கு பரிசளிப்போம். பொதுவாக பதின்பருவ சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக மூன்று விதமான ‘இ’ மேலோங்கி இருக்கும். அதாவது முதலாவது ‘இ’, ‘எக்ஸ்பிரிமென்ட்டிங்’. நாம் எதையாவது செய்யக்கூடாது என வலியுறுத்தி அதற்கு என்னதான் விளக்கம் கொடுத்தாலும் அதை அவர்கள் செய்து பார்ப்பார்கள். இரண்டாவது ‘இ’ ‘எக்ஸ்பிரியன்சிங்’.
அதாவது வித்தியாசமான அனுபவத்திற்காக ஏங்குவது. மூன்றாவது ‘இ’ ‘எக்ஸ்பண்டிங்’. அதாவது அறிவை விரிவாக்குவது. இப்படி விடலைப் பருவத்தில் மூன்று ‘இ’க்கள் மேலோங்கி இருப்பது இயல்பு தான். ஆனால், நாம் தான் அவர்களுக்கு நல்ல வழியை காட்டிக் கொடுப்பவராக இருக்க வேண்டும். செல்போன்கள் குழந்தைகளின் கவனிக்கும் திறனை தான் முதலில் பாதிக்கிறது.
வெளி உலகத்துடனான தொடர்பை குறைத்து அவர்களை தனிமைப்படுத்துகிறது. செல்போன், தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகளுக்கு எல்லாவிதமான தகவல்களும் கிடைத்து விடுகின்றன. ஆனால், அதைப் பயன்படுத்தக் கூடிய சிந்தனை திறன் குழந்தைகளுக்கு மேம்படாமல் போகிறது. எதிலும் ஆழமான நாட்டம் இல்லாமல் போகிறது. செல்போன்கள் நிஜத்தை மறக்கடிக்கிறது. இதன்மூலம் அவர்கள் மனநோயாளிகளாக மாறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது ஒரு சமூக வியாதி. இது அவர்களின் உடல் நலனையும், மன நலனையும் மட்டுமல்ல, அவர்களின் எதிர்காலத்தையே சீரழித்து விடும்.
* படிப்பு, விளையாட்டு, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து செல்போன் பயன்பாட்டிற்கு நேரத்தை வரையறுப்பது ஒன்றே முதல் தீர்வு
* செல்போன்களால் ஏற்படும் விளைவுகளை உடனடியாக நிறுத்த முடியாது என்றாலும், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்தால்தான் படிப்படியாக குறைக்க முடியும்.
* செல்போன் என்ற மாய அரக்கனிடம் இருந்து மாணவர்களை விடுவித்து, ஒரு வளமான, அழகான எதிர்காலத்தை அவர்களுக்கு பரிசளிப்போம்.
* ஜாதிய வன்முறையை தடுப்பது எப்படி? நீதிபதி சந்துரு அறிக்கை பள்ளிகளில் ஜாதிய வன்முறையைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது. அதன் முக்கிய அம்சங்கள் சில:
* பள்ளிகளின் பெயர்களில் உள்ள ஜாதி அடையாளங்களை நீக்க அரசாணை வெளியிட வேண்டும். புதிய பள்ளிகள் தொடங்கும்போது ஜாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்ற உறுதிமொழி பெறப்பட வேண்டும். தனியார் பள்ளிகளிலும் ஜாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளையும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் உடனடியாக கொண்டு வர வேண்டும்.
* உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் இடமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஜாதி அதிகமாக உள்ள பகுதிகளில், அதே சமூகத்தை சேர்ந்தவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்.
* வருகை பதிவேட்டில் மாணவர்களின் ஜாதி பெயர் இடம்பெறக் கூடாது. ஆசிரியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜாதியை குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கக்கூடாது. வகுப்பறையில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெயர்களை அறிவிக்கக்கூடாது. அவர்களின் ஜாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.
* மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் அணிய தடை விதிக்க வேண்டும். ஜாதிய அடையாளத்தை குறிக்கும் வகையில் சைக்கிள்களில் வர்ணம் தீட்டக் கூடாது. மாணவர்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்க வேண்டும்.
* பள்ளியில் சமூக நீதி மாணவர் படை உருவாக்க வேண்டும். இதில் அனைத்து சமுதாய மாணவர்களும் இடம்பெற வேண்டும். அவர்களுக்கு தனி சீருடை, பயிற்சி போன்றவை வழங்கப்பட வேண்டும்.
* ஜாதி பிரச்னை அதிகம் உள்ள பகுதிகளில் அரசு சிறப்பு நுண்ணறிவு பிரிவை உருவாக்க வேண்டும்.
* பெற்றோருக்கு முக்கிய பொறுப்பு
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் 2 பேருமே வேலைக்குச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனால் சிறுவர்கள் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறார்கள். செல்போனை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் நெல்லை டவுனில் உள்ள ஒரு பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்ற போது மாணவ-மாணவிகள் 10 பேர் செல்போனை பள்ளிக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.
அந்த செல்போனை பறிமுதல் செய்து, இறுதித்தேர்வு முடிந்த பிறகு வாங்கிக் கொள்ளுங்கள் எனக்கூறினேன். ஆனால், பெற்றோரும், மாணவர்களும் அலுவலகத்திற்கு வந்து இனிமேல் இதுபோல் நடக்காது எனக்கூறி கேட்டப்பிறகு கொடுத்து அனுப்பினேன். செல்போன் பயன்பாட்டை வரைமுறைப்படுத்தும் முக்கியப் பொறுப்பில் பெற்றோர் உள்ளனர். பள்ளிகளில் நடக்கும் மோதலை தடுக்க நெல்லை மாவட்டத்தில் அன்பாடும் முன்றில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மாணவ- மாணவிகளின் தனிப்பட்ட பிரச்னைகளை கேட்டு அவர்களுக்கு ஆலோசணை வழங்கி வருகின்றனர். செல்போன்களால் ஏற்படும் விளைவுகளை உடனடியாக நிறுத்த முடியாது என்றாலும், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்தால்தான் படிப்படியாக குறைக்க முடியும். மாணவர்கள் பிரச்னைகளை ஊடகங்கள் பூதாகரமாக்கக் கூடாது. பிரச்னை மேலும் வளராமல் இருக்க அனைவரும் பெறுப்புணர்வுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.’ என்றார்.
The post ஜாதிய வீடியோக்கள் ரவுடிகளின் ரீல்ஸ் மோகம் ஆபாச படங்கள், அரிவாளை தூக்கும் புத்தக கைகள் appeared first on Dinakaran.