தற்போது கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெரிய கடம்பூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஊராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் அன்வர்திகான்பேட்டையிலிருந்து திருத்தணிக்கு செல்லும் சாலையில் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை (தடம் எண்.83ஏ) சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அரசு பேருந்து சேவை மற்றும் போக்குவரத்து பாதிப்பால் வேலைக்கு சென்றவர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கிராம மக்கள் தானாகவே மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அரை மணி நேரம் காலதாமதமாக அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் மறியல்: திருத்தணி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.