சமூகநீதி உணர்வு நம்முடைய உள்ளங்களில் இருக்கும் வரை தமிழ்நாட்டை யாராலும் பிரித்தாள முடியாது: துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமூகநீதி உணர்வு நம்முடைய உள்ளங்களில் இருக்கும் வரை தமிழ்நாட்டை யாராலும் பிரித்தாள முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நேற்று நடந்த சமத்துவ நாள் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து, அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்திற்குச் சென்ற முதல் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.ராஜா. “ஒடுக்கப்பட்ட மக்களை ‘ஆதி திராவிடர்’ என்று அழைக்க வேண்டும்” என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவரும் அவர்தான்.

இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த எம்.சி.ராஜா பெயரில், இன்றைக்கு நவீன கல்லூரி மாணவர் விடுதி கட்டிட திறப்பு விழா நடந்திருக்கிறது. சமூகத்தில், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களை நாம் கைதூக்கி விட வேண்டும். இதுதான் முதல்வருடைய தலைமையிலான திராவிட மாடல் அரசின் லட்சியம். இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது 9.69 சதவீதமாக இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வந்துள்ளது. “எல்லாருக்கும் எல்லாம்” என எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்கின்ற திமுக அரசின் திட்டங்கள் தான் இந்த வளர்ச்சிக்கு ஒரே காரணம்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தங்கை அரியலூர் அனிதா நீட் தேர்வினால் 2017ல் உயிரிழந்தது அனைவருக்கும் தெரியும். நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி. எனவே தான், நீட்டுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை, அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. அன்றைக்கு மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய, தங்கை அனிதாவுக்கு அனுமதி இல்லை. ஆனால், இன்றைக்கு அனிதா பிறந்த அரியலூரில் மருத்துவக்கல்லூரி அரங்கத்திற்கு, அவருடைய பெயரை சூட்டி அழகு பார்த்தது திராவிட மாடல் அரசு, முதல்வர்.

இதற்கு பெயர் தான் சமூகநீதி. இந்த உணர்வு நம்முடைய உள்ளங்களில் இருக்கின்ற வரை, தமிழ்நாட்டை யாராலும் பிரித்தாள முடியாது. ஆனாலும், நம்மை பிரித்தாளுகின்ற முயற்சிகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த சூழ்ச்சிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை முறியடிக்க வேண்டும். அதற்கு பெரியார், அம்பேத்கருடைய பார்வை நம் அனைவருக்கும் வேண்டும். பட்டியலின பழங்குடியின மக்கள் சமூக ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார விடுதலையும் அடைய வேண்டும். அதற்காகத் தான் “அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” போன்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

The post சமூகநீதி உணர்வு நம்முடைய உள்ளங்களில் இருக்கும் வரை தமிழ்நாட்டை யாராலும் பிரித்தாள முடியாது: துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: