விருதுநகர் ராட்டினத்தில் இருந்து இளம்பெண் தவறி விழுந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குபதிவு..!!

விருதுநகர்: விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து இளம்பெண் தவறி விழுந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் கேவிஎஸ் பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி சார்பில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் ராட்சத ராட்டினம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு கவுசல்யா (வயது 22) என்ற இளம்பெண் ராட்டினத்தில் ஏறினார். ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறும், பெல்ட் அணிந்துகொள்ளுமாறும் இயக்குபவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் கவுசல்யா பாதுகாப்பு சாதனத்தை காலில் மாட்டாததால் ராட்டினம் தலைகீழாக சுற்றியபோது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக எந்திரத்தால் இயக்கப்பட்ட ராட்டினம் நிறுத்தப்பட்டது. கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யாவை மீட்ட பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேற்பார்வையாளர் தேவேந்திரன், ஆபரேட்டர் முகேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post விருதுநகர் ராட்டினத்தில் இருந்து இளம்பெண் தவறி விழுந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குபதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: