தேனி : தேனி மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை உலா நிறைவு நாள் நிகழ்வு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வனவிலங்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நிலையான சகவாழ்வை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டு, மாவட்டத்தில் 10 அரசுப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது.
அதில் தலா 25 மாணவர்கள் என 8, 9ம் வகுப்பு பயிலும் 250 அரசுப்பள்ளி மாணவர்களை வண்ணாத்திப்பாறை, கூடலூர், மாவூற்றுவேலப்பர் கோயில், கண்டமனூர் ஆகிய இடங்களுக்கு இயற்கை உலா அழைத்து செல்லப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான தேர்வு நடத்தப்பட்டு, நிறைவு நாளான நேற்று பரிசுகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தேனியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக அலுவலக கூட்டரங்கில், வனத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை உலா நிறைவு நாள் நிகழ்ச்சி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
இதில், மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசும்போது: இயற்கை சூழல் பற்றி படித்து தெரிந்து கொள்வதைவிட, இதுபோன்ற நிகழ்வுகளில் நேரடியாக கலந்து கொள்வதன் மூலம் அதிக தகவல்களை உடனடியாக புரிந்து கொள்ள முடியும்.
மேலும் விலங்குகள், பறவைகள், மரங்கள் மற்றும் தாவரங்களின் முக்கியத்துவம் குறித்தும், அதன் வாழ்வியல் முறைகள் மற்றும் அதனை பராமரிக்கும் முறைகள் குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
இயற்கை சுற்றுலாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, சில்வர் தண்ணீர் பாட்டில், விதை பென்சில்கள் மற்றும் பேனாக்கள், விதை பந்துகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், பெரியார் அகஸ்தியமலை நிலப்பரப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் காப்பகம், நீலகிரி தஹர் போன்றவற்றை விளக்கும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் வழங்கப்பட்டது.
வைகை ஆறு, நீலகிரி தார் மற்றும் ஆசிய யானைகள் தொடர்பான சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒலி-ஒளி காட்சிகள் திரையிடப்பட்டது. இந்நிகழ்வினை சிறப்பாக வழிநடத்திய வன அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில், உதவி வன பாதுகாவலர் அரவிந்த் மற்றும் வன அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை உலா நிறைவு விழா appeared first on Dinakaran.