அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் அமைதியை மீட்டெடுக்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மெய்டீஸ் மற்றும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்களின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இரு சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் மோதலுக்கு தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
மெய்டீஸ் சமூகத்தை சேர்ந்த 6 பேரும், குக்கி சமூகத்தை சேர்ந்த 9 பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* மீண்டும் பதற்றம்
இதற்கிடையே மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள கோன்சகுல் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் கிராமத் தலைவர் ஜம்சன் அயோன்மாய் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். காயமடைந்த கிராம தலைவர் உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதலை நடத்தியது குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
* 4 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் நம்போலில் தடை செய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். தவுபால் மாவட்டத்தில் உள்ள கோங்ஜோம் கெபாச்சிங் பகுதியில் தடை செய்யப்பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இதேபோல் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் குராய் கோங்பாலில் இருந்து தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post மணிப்பூர் மோதலுக்கு தீர்வு மெய்டீஸ், குக்கி குழுக்களுடன் அரசு பேச்சுவார்த்தை: கிராமத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதால் மீண்டும் பதற்றம் appeared first on Dinakaran.