டெல்லி: தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளை சந்திக்க ஆவலுடன் உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க, பிரதமர் மோடி நாளை (ஏப். 6) ராமேஸ்வரம் வருகிறார். இலங்கை அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து, அவர் நாளை காலையில் இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப்பாலத்தின் மையப் பகுதிக்கு சென்று மேடையில் நின்றபடி புதிய ரயில் பாலத்தில், ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.
செங்குத்து தூக்கு பாலத்தையும் திறந்து கப்பல் கடந்து செல்வதை பார்வையிட உள்ளார். அதன்பின் ராமநவமியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஆலயம் விடுதி வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து அன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்கிறார். பிரதமரின் வருகையொட்டி நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர். பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் திறப்பு விழா நிகழ்ச்சியை முடிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுறுத்தினர்.
பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி தொடர்பான அனைத்து ஆய்வுகளையும் நேற்று நிறைவு செய்தனர். மேலும், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் செங்குத்து தூக்கு பாலம் திறக்கப்பட்டு, இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலில் வீரர்கள் தேசியக்கொடி அசைத்தபடி கடந்து சென்றனர். இதை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு உயரதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிரதமரின் வருகை, திறப்பு விழா, கோயில் தரிசனம், பொதுக்கூட்ட நிகழ்ச்சி குறித்த ஒத்திகை இன்று நடைபெறுகிறது. பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், தமிழ்நாடு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளில் அந்தந்த துறைமுகங்களில் படகுகள் அனைத்தும் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாம்பன் பாலம் மையப்பகுதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவு, பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து கப்பல்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு போலீசார் 3 ஆயிரம் பேர் இன்று ராமேஸ்வரம் வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளை சந்திக்க ஆவலுடன் உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; நாளை (ஏப். 6) புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்க உள்ளேன். ராமநாதசுவாமி ஆலயத்தில் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்: பிரதமர் மோடி பதிவு appeared first on Dinakaran.