ஐபிஎல் 16வது லீக் போட்டி 203 ரன் விளாசிய லக்னோ: மும்பையின் பாண்ட்யாவுக்கு 5 விக்கெட்

லக்னோ: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் 16வது லீக் போட்டியில் நேற்று, லக்னோ அணி, 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. ஐபிஎல் 18வது தொடரின் 16வது லீக் போட்டி, லக்னோவில் நேற்று நடந்தது. இதில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் களமிறங்கினர். துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய இவர்கள் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 7வது ஓவர் முடிவில் 31 பந்துகளில், 2 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 60 ரன் குவித்திருந்த மார்ஷை, விக்னேஷ் புத்துார் மந்திரப் பந்து வீசி அவரே கேட்ச் செய்து அவுட்டாக்கினார்.

அப்போது அணியின் ஸ்கோர், 76. அதன் பின், நிகோலஸ் பூரன் களமிறங்கினார். அவரும் தாக்குப்பிடிக்காமல், ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில் தீபக் சஹரிடம் கேட்ச் தந்து 12 ரன்னில் வௌியேறினார். அடுத்து வந்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் (2 ரன்), 11வது ஓவரை வீசிய பாண்ட்யா பந்தில் பாஸ்க்கிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் ரன் குவிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. அதன் பின், ஆயுஷ் படோனி, அய்டன் மார்க்ரமுடன் இணை சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களை மளமளவென சேர்த்தனர். 16வது ஓவரின்போது இந்த இணை 51 ரன் சேர்த்திருந்த நிலையில் படோனி (19 பந்து 30 ரன்), அஷ்வனி குமார் பந்தில் ரிக்கெல்டனிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.

பின், டேவிட் மில்லர் களமிறங்கினார். 17வது ஓவரின்போது மார்க்ரம் அரை சதத்தை அநாயாசமாக கடந்தார். ஆனால், அடுத்த ஓவரிலேயே மார்க்ரம் (38 பந்து 53 ரன்), பாண்ட்யா பந்தில் பவாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார். பின் வந்த அப்துல் சமத் (4 ரன்), டிரென்ட் போல்ட் பந்தில் நமன் திர்ரிடம் கேட்ச் தந்து பெவிலியன் திரும்பினார். பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் முதல் 3 பந்துகளில் 12 ரன் குவித்த மில்லர், அடுத்த பந்தில் நமன் திர்ரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அடுத்து வந்த ஆகாஷ் தீப், சான்ட்னரிடம் கேட்ச் தந்து அவுட்டானார். 20 ஓவர் முடிவில் லக்னோ, 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா அற்புதமாக பந்து வீசி, 36 ரன் தந்து 5 விக்கெட் வீழ்த்தினார். அதையடுத்து, 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை களமிறங்கியது.

 

The post ஐபிஎல் 16வது லீக் போட்டி 203 ரன் விளாசிய லக்னோ: மும்பையின் பாண்ட்யாவுக்கு 5 விக்கெட் appeared first on Dinakaran.

Related Stories: