3,37,531 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5264.320 மெ.டன் அரிசி: ஒவ்வொரு மாதமும் வழங்கல் கலெக்டர் தகவல்

கரூர், ஏப். 2: நியாயவிலை கடைகள் மூலம் கரூர் மாவட்டத்தில் 3,37,531 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் 5264.320 மெ.டன் அரிசி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், கரூர் வட்டம், உப்பிடமங்கலம், லிங்கத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பிறகு கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசின் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் பொதுமக்கள் அதிகம் பயனடையக்கூடிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நியாய விலைக் கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்க கூடிய அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலமு குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தவித பாதிப்பு இன்றி, அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கருர் வட்டம் உப்பிடமங்கலம், லிங்கத்தூர் நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் 403 முழு நேரம் மற்றும் 233 பகுதி நேரம் நியாய விலைக் கடைகள் என மொத்தம் 636 நியாய விலைக் கடைகள் செயல்படுகிறது. கருர் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைகள், சர்க்கரை விருப்ப அட்டைகள், காவலர் அட்டைகள், வனக் காவலர் அட்டைகள் உள்ளிட்ட 3,37,531 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 3,37,531 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் 5264.320 மெ.டன் அரிசி, 433.072 மெ.டன் சர்க்கரை, 132.934 மெ.டன் கோதுமை, 24,000 லிட்டர் மண்ணெண்ணெய், 281.532 மெ.டன் துவரம்பருப்பு மற்றும் 2.85.934 லிட்டர் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் தரம், அளவு மற்றும் கடைகள் உரிய நேரத்தில் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, தாசில்தார் குமரேசன், வழங்கல் அலுவலக பறக்கும் படை தாசில்தார் கண்ணன் உட்பட அனைவரும் உடனிருந்தனர். புகார் தரலாம்: குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் இலவச சேவைகள் மற்றும் புகார்கள் குறித்து 1967 மற்றும் 1800 425 5901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் புகார் அளிக்கலாம். அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்க 1800 599 5950 மற்றும் 9677736557 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

The post 3,37,531 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5264.320 மெ.டன் அரிசி: ஒவ்வொரு மாதமும் வழங்கல் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: