பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கல்வி நிதி நிறுத்தியது நியாயமற்றது: நாடாளுமன்ற குழு கண்டனம்

புதுடெல்லி: ‘பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்க மறுப்பதால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான கல்வி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தியது நியாயமற்றது’ என நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. புதிய தேசியக் கொள்கையின்படி, பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் மூலமாக மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சர்வ சிக்சா அபியான் (எஸ்எஸ்ஏ) நிதி ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளது. இதன் மூலம் இந்தியை திணிக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் திமுக அரசு திட்டவட்டமாக உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையிலான, பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய நாட்டில் 36 மாநிலங்களில் 33 மாநிலங்கள் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளன. ஆனால், இத்திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு ரூ.2,152 கோடி, கேரளாவுக்கு ரூ.859.63 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி எஸ்எஸ்ஏ நிதி விடுவிக்காமல் ஒன்றிய அரசு இருக்கிறது. இது நிச்சயம் நியாயமில்லாதது.

எஸ்எஸ்ஏ நிதி என்பது பிஎம்ஸ்ரீக்கு முந்தைய கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) இலக்குகளை அடைய மாநிலங்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டது. ஆர்டிஇ என்பது நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்ட சட்டம். இது ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக வழங்குகிறது. இதை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைத்து பார்க்க முடியாது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றன. மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை ஒப்பிடுகையில் தேசிய சராசரியை விட அதிகமாக செயல்பட்டுள்ளன. அப்படியிருக்கையில் எஸ்எஸ்ஏ நிதிகளின் பற்றாக்குறை மற்றும் தாமதம் அவற்றின் பள்ளி உள்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்சி, மாணவர் ஆதரவில் மேலும் முன்னேற்றங்களை தடுக்கும்.

ஒன்றிய அரசு நிதி வழங்காததால், ஆசிரியர்கள் மற்றும் வளப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க அம்மாநிலங்கள் தங்களின் சொந்த நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே, சம்பளம், ஆசிரியர் பயிற்சி திட்டங்கள் மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க, கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள பள்ளி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க குழு பரிந்துரைக்கிறது. எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்கீடுகளை ஒன்றிய அரசு மறு மதிப்பீடு செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கை அல்லது பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததற்காக எந்த மாநிலமும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

The post பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கல்வி நிதி நிறுத்தியது நியாயமற்றது: நாடாளுமன்ற குழு கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: