ரூ.6000 கோடி மகாதேவ் ஆப் மோசடி சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் சிபிஐ சோதனை

ராய்ப்பூர்: ஆறாயிரம் கோடி மகாதேவ் ஆப் மோசடி தொடர்பாக சட்டீஸ்கரில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். சட்டீஸ்கரில் ரூ.6ஆயிரம் கோடி மகாதேவ் ஆப் மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ராய்ப்பூர் மற்றும் பிலாயில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். மேலும் பாகலின் நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக துர்க் மாவட்டத்தின் பிலாயில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், ஐபிஎஸ் அதிகாரிகள் அனந்த் சாப்ரா, அபிஷேக் பல்லவா மற்றும் ஆரிவ் ஷெயிக் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இது குறித்து பூபேஷ் பாகேல் அலுவலகம் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘இப்போது சிபிஐ வந்துவிட்டது. ஏப்ரல் 8 மற்றும் 9ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் ஏஐசிசி கூட்டத்திற்காக அமைப்பக்கப்பட்ட வரைவுக்குழு கூட்டத்திற்காக பூபேஷ் பாகேல் டெல்லி செல்ல இருந்தார். ஆனால் அதற்கு முன் சிபிஐ ராய்ப்பூர் மற்றும் பிலாய் வீடுகளுக்கு வந்துவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மாநில தலைவர் தீபக் பைஜ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘சிபிஐ எங்களது இரு தலைவர்களின் வீடுகளில் முகாமிட்டுள்ளது. இது அரசின் விரக்தியை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். காங்கிரஸ் ஒருபோதும் தலை வணங்காது. இந்த போராட்டம் தலைவர்களை பற்றியது மட்டுமல்ல. அதிகாரத்தால் நசுக்க முயற்சிக்கப்படும் ஒவ்வொரு உண்மையை பற்றியது என்பதை பாஜ நினைவில் கொள்ள வேண்டும். உண்மை தலைவணங்காது அநீதிக்கு முடிவு நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ரூ.6000 கோடி மகாதேவ் ஆப் மோசடி சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.

Related Stories: