நாகர்கோவில்: கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை உள்ள சாலையின் கட்டுப்பாடு தேசிய நெடுஞ்சாலைதுறை, மாநில நெடுஞ்சாலைத்துறையில் உள்ளது. இதனால் ஒரு துறை சாலையை பராமரிக்கும்போது சில பகுதி குண்டும் குழியுமாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இந்த சாலையை ஒரு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி முதல் களிக்காவிளை வரை உள்ள சாலையில் பல பகுதிகளில் மரணகுழிகளாக பள்ளங்கள் உள்ளன. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சாலையில் பார்வதிபுரம் உள்ளது.
மாவட்டத்தின் மேற்கு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு பார்வதிபுரம் நாகர்கோவில் மாநகர பகுதியின் நுழைவாயிலாக உள்ளது. இந்த பகுதியில் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு வரும் பேருந்துகள், மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் பல்வேறு கிராம புறங்களில் இருந்து வரும் சாலைகளும் பார்வதிபுரத்தில் இணைகிறது. இதனால் பாலத்தின் கீழ் பகுதியில் அதிகமாக வாகனங்கள் இயக்கம் நடந்து வருகிறது. வாகனங்கள் அதிகமாக வருவதால், சாலைகளில் பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில பள்ளங்களை தற்காலிக முறையில் சீர்செய்யுதம் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் பள்ளங்கள் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பலத்த சிரமத்திற்கு அளாகி வருகின்றனர். மேலும் பள்ளங்களால் விபத்துகளும் ஏற்படும் நிலை உள்ளது. மழைகாலத்தில் மேம்பாலத்தின் இருந்து மழைநீர் ஒரு குறிபிட்ட இடங்களில் கீழ் பகுதியில் உள்ள சாலையில் கொட்டுவதால் சாலைகள் சேதமாகி வருகிறது என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.
The post சாலையில் ராட்சத பள்ளங்கள்: பார்வதிபுரத்தில் விபத்து அபாயம் appeared first on Dinakaran.