முண்டந்துறை வனப்பகுதியில் யானைகளுக்கு இடையே மோதலில் ஒரு யானை பலி: பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் புதைப்பு


வி.கே.புரம்: முண்டந்துறை வனப்பகுதியில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு யானை தந்தத்தால் குத்தப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு யானை உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவில் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ்பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் வசிக்கின்றன.

இயற்கை எழில் சூழ்ந்த இந்த காப்பகம், யானைகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. கடந்த 2019ல் 50 யானைகள் மட்டுமே இருந்த இப்பகுதியில் தற்போது ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. பல்வேறு வனப்பகுதிகளில் இருந்து இப்பகுதிக்கு யானைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளன. தேவையான உணவுகள் இப்பகுதியில் எளிதாக கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம். சமீபத்தில் யானைகள் காப்பகமாகவும் இப்பகுதி அறிவிக்கப்பட்டது.

இதனால் உணவு உள்ளிட்ட காரணங்களால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்யும் யானைகள் இங்கே கொண்டு வந்து விடப்பட்டு வருகிறது. அரிசி கொம்பன் உள்பட 2 யானைகள் இப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிக்கு வந்த பிறகு இந்த யானைகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதால் சாந்தமாகி விட்டதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பால் யானைகளுக்கு இடையிலான மோதல் சம்பவங்களும் நிகழத் தொடங்கியுள்ளன.

இதுபோன்ற மோதலில் 20 வயது மதிக்கத்தக்க யானை, கடந்த 27ம் தேதி உயிரிழந்துள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட வட்டப்பாறை வனக்காவல் பகுதியின் பழைய தோட்டப்பகுதியில் கடந்த 27ம் தேதி ஆண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து அம்பை வனக்கோட்ட துணை இயக்குநர் இளையராஜா, கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை உதவி வன பாதுகாவலர் குணசீலி தலைமையில் கால்நடை மருத்துவர் மனோகரன், கால்நடை உதவி ஆய்வாளர் அர்னால்ட் வினோத், நெல்லையை சேர்ந்த கால்நடை உடற்கூறியியல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியர் முத்துகிருஷ்ணன், வி.கே.புரம் கால்நடை உதவி மருத்துவர் சிவமுத்து, முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி, கன்னியாகுமரி மாவட்ட இயற்கை பவுண்டேஷன் தலைவர் வினோத், சேர்வலாறு காணிக்குடியிருப்பு மாநில வன உயிரின வாரியத்தின் நிலை குழு உறுப்பினர் சாவித்ரி மற்றும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கால்நடை மருத்துவக் குழுவினரால் யானையின் இறப்பிற்கான காரணங்கள் குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். இதில் 2 ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இறந்த யானையின் இடதுபக்க முன்னங்காலின் கீழ்ப்பகுதியில் மற்றொரு யானை அதன் தந்தத்தால் தாக்கியதால் இதயம் மற்றும் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டு பலியாகி உள்ளது. இந்த யானை இறந்து ஓரிரு நாட்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இறந்த யானை உடல் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

* நடந்தது என்ன?
யானைகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் நடப்பதுண்டு. அப்படித்தான் முண்டந்துறை வனச்சரகத்தில் கடந்த 27ம் தேதி 2 ஆண் யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு யானை மற்றொரு யானையை விட பலம் வாய்ந்தது என்பதை காட்டுவதற்காகவே இந்த மோதல் நடந்து இருப்பதாகவும், இந்த மோதலில் தான் மற்றொரு யானையின் தந்தம் குத்தியதில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post முண்டந்துறை வனப்பகுதியில் யானைகளுக்கு இடையே மோதலில் ஒரு யானை பலி: பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் புதைப்பு appeared first on Dinakaran.

Related Stories: