சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு ஒன்றிய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.
இதன்படி அலுமினியம் ஃபாயில் காகிதங்கள் மீது அடுத்த 6 மாதங்களுக்கு ஒரு டன்னுக்கு 873 அமெரிக்க டாலா் பொருள் குவிப்பு தடுப்பு வரியாக விதிக்கப்படுகிறது. மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் காந்தங்கள் மீது 35 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வேக்வம் ஃபிளாஸ்க் மீது டன்னுக்கு 1,732 அமெரிக்க டாலா், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் மீது டன்னுக்கு 276 டாலா் வரி விதிக்கப்படுகிறது.
இந்த அமிலம் ஜப்பானில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுவதால் அந்நாட்டில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கும் இந்த வரி பொருந்தும். வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தக விவகாரங்கள் தீா்வுப் பிரிவின் பரிந்துரையின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சீனாவில் இருந்துதான் பெருமளவிலான மலிவு விலைப் பொருள்கள் இறக்குமதியாகின்றன.
எனவே, அந்நாட்டுப் பொருள்கள் மீதுதான் அதிக அளவு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு அதிக பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
The post சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 4 பொருட்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.