தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் மதிய வேளையில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்ல கூடாது: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் மதிய வேளையில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டுச் செல்ல கூடாது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் சராசரி வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் உயர் வெப்ப நிலையிலிருந்து தங்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, சூடான வறட்சியான சிவந்த சருமம், உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் இருப்பது, குமட்டல் மற்றும் வாந்தி, கடுமையான தலைவலி சோர்வு மற்றும் கால் பிடிப்பு, மூச்சுத்திணறல் நெஞ்சு படபடப்பு, தலைசுற்றல், மயக்கம், பதற்றம் உள்ளிட்டவை வெப்பம் சார்ந்த நோய்க்கான அறிகுறிகள். இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக 108 ஆம்புலன்சை அழைக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் போதுமான அளவு நீர் பருக வேண்டும். நேரிடை சூரிய ஒளியை தவிர்க்க வேண்டும். வெப்ப அலைகளில் இருந்து பாதுகாக்க குடைகள், தொப்பிகள் பயன்படுத்த வேண்டும். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். மதிய வேளையில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை விட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், காபி, டீ, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

நண்பகல் வேளைகளில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். அதிக புரத சத்து உணவு மற்றும் காலாவதியான உணவுகளை தவிர்க்க வேண்டும். கடுமையான வெப்பத்தால் பாதிக்கபட்ட ஒருவருக்கு குளிர்ந்த நிழல் உள்ள காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் உடைகளின் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். குளிர்ந்த குடிநீரை பருக வழங்க வேண்டும், பாதிக்கப்பட்டவருக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் மதிய வேளையில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்ல கூடாது: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: