நடப்பாண்டிலும் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்”, ஒரு லட்சம் பசுமை குடில் அமைக்க திட்டம் :அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

சென்னை : ரூ. 146 கோடியில் நடப்பாண்டிலும் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீது அவர் ஆற்றிய பதிலுரையில், “கடந்த 4 ஆண்டுகளில் உழவர் பெருமக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை பாராட்டி முதலமைச்சரை சந்தித்து விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகை வழங்க ரூ. 1,538 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம், கருவிகள் வாங்க மானியம் வழங்க ரூ.215.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 146 கோடியில் நடப்பாண்டிலும் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” செயல்படுத்தப்படும். “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தில் 21 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.

விவசாயிகளுக்கு உதவும் வகையில் “முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்” 1,000 இடங்களில் அமைக்கப்படும். பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5,279 விவசாயிகள் பயனடைவார்கள். இதுவரை 2.68 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.26,724 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2025-26-ம் நிதியாண்டில் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.8, 186 கோடி ஒதுக்கப்படும். இந்தாண்டு ஒரு லட்சம் பசுமை குடில் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தளி பகுதியில் நறுமண ரோஜா பூ சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் வேளாண் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. 2021-22 முதல் 2023-24 வரை 34.38 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பளவு 151 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருபோக சாகுபடி பரப்பளவு 33.60 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நடப்பாண்டிலும் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்”, ஒரு லட்சம் பசுமை குடில் அமைக்க திட்டம் :அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் appeared first on Dinakaran.

Related Stories: