வரலாற்று சிறப்புமிக்க விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கற்கால மனிதன் வாழ்ந்ததற்கான தடயங்கள், மன்னர் ஆட்சிகால தடயங்கள் கிடைத்து வருகின்றன. அதன்படி வரலாற்றை பறை சாற்றும் வகையில் தொடர்ந்து பம்பை ஆற்றில் அகழ்வராய்ச்சி மேற்கொள்ளப்படும் என விழுப்புரத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் சட்ட சபையில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஆதிச்சனூரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என அடுத்த அறிவிப்பை வெளியிட்டார். இது தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மற்றொரு பக்கம் தமிழக அரசுக்கு முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் உள்ள ஆதிச்சனூர் பகுதியில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்கு உரியதாகும். கண்டாச்சிபுரம் வட்டத்தில் ஆதிச்சனூருக்கு அருகாமையில் உள்ள கிராமம் தி.தேவனூர். இங்குத் தொல் மாந்தர்கள் வாழ்ந்ததற்கானத் தடயங்கள் காணப்படுகின்றன. இங்கிருக்கும் நெடுங்கல் அல்லது குத்துக்கல் குறிப்பிடத்தக்கது. சுமார் 15 அடிகளுக்கு மேல் உயரமும், சுமார் 8 அடி அகலமும், 6 அங்குல கனமும் கொண்டதாக இருக்கிறது.
இதன் எடை பல டன்கள் ஆகும். பொதுமக்கள் இதனை ‘கச்சேரிக்கல்’ என்று அழைக்கின்றனர். இது, இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நினைவுக் கல் ஆகும். நடுகல் வழிபாட்டின் தொடக்கப் புள்ளியாகவும் இந்நெடுங்கல் கருதப்படுகிறது. இதனைச்சுற்றிலும் கல் வட்டங்களும் காணப்படுகின்றன. புயல், காற்று, மழை, வெயில் போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தாண்டி பல்லாண்டு காலம் நின்றிருக்கும் இந்த நினைவுக் கல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிவை சந்தித்து வருகிறது.
நெடுங்கல்லுக்குச் சற்று தொலைவில் மிகப்பெரிய கிரானைட் கற்களால் அமைக்கப்பட்ட கல் திட்டை காணப்படுகிறது. இதனை ‘வாலியர்’ எனும் ‘குள்ள மனிதர்கள்’ வாழ்ந்த வீடாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இதுவும் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நினைவு கல் ஆகும்.
தி.தேவனூரில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். 147 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஆங்கிலேயர் ஆவணங்களில்” தேவனூர் வரலாற்றுத் தடயங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவை உலகநாடுகளின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொல்மாந்தர் நினைவுச் சின்னங்களுடன் பெரிதும் ஒப்பிட்டு பேசப்படுகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். ஆதிச்சனூரில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கும்போது தி.தேவனூர் நினைவுச் சின்னங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தி.தேவனூருக்கு மிக அருகாமையில் நாயனூர் வனப்பகுதியில் காணப்படும் கல்வட்டங்கள், கல் திட்டைகள், வீரபாண்டி கிராமத்திலுள்ள தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள் ஆகியவற்றையும் பாதுகாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும், விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post விழுப்புரம் மாவட்டம் தேவனூர் கிராமத்தில் குள்ள மனிதர்கள் வாழ்ந்த கல்திட்டை வீட்டை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.