பந்தலூர், மார்ச் 18: பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடி முதல் காவயல் வரையுள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மழவன் சேரம்பாடி முதல் காவயல் வரையுள்ள சுமார் 3 கிமீ தூரமுள்ள சாலை கடந்த 10 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலை தற்போது பழுதடைந்து குன்டும் குழியுமாக காணப்படுகிறது. பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலை சீரமைக்காமல் இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இப்பகுதியில் தாயகம் திரும்பியவர்கள், பழங்குடியினர் என 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சாலையானது புஞ்சக்கொல்லி, சப்பந்தோடு, சேரம்பாடி, கையுன்னி உள்ளிட்ட பகுதிகளுக்கு இணைப்பு சாலையாகவும் உள்ளது. தினம் தோறும் ஆட்டோ உட்பட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மழவன் சேரம்பாடி முதல் காவயல் சாலை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.