நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நுங்கம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்கத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார். நுங்கம்பாக்கம் எம்.ஒ.பி. வைணவக் கல்லூரி அருகிலுள்ள சென்னை மாநகராட்சி பூங்காவை கல்லூரியை சுற்றியுள்ள பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவிகள் பயன்படுத்திடும் வகையில், எம்.ஒ.பி. வைணவக் கல்லூரியின் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 சதவீத முழுப் பங்களிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேம்படுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் இந்த பூங்காவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான திறந்தவெளி சிறுகலையரங்கம், சிசிடிவி கண்காணிப்பு, 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த பூங்காவின் பராமரிப்பு பொறுப்பையும் கல்லூரியே ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் இக்கல்லூரி மேற்கொண்டுள்ள மரம் நடும் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மலர்மாலைக்கு பதிலாக ‘மரம் சான்றிதழ்’ வழங்குவதுடன், வருகை தந்த விருந்தினரின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, பராமரித்து வருகின்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிறப்பித்து கல்லூரியின் முதல்வர் “மரம் சான்றிதழை” வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் எழிலன், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், உள்பட கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நுங்கம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: