பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு வரும் 26ல் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: மாணவர்கள் மற்றும் பள்ளியின் பாதுகாப்பு சார்ந்து அனைத்து பள்ளிகளிலும் மார்ச் 26ம் தேதி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி பள்ளி அளவில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் அவ்வப்போது தலைமையாசிரியர்களால் நடத்தப்படுகின்றன. அதன்படி, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளியின் பாதுகாப்பு சார்ந்து 26.03.2025 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்திட தேவையான நடவடிக்கையை எடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மகளிர் நலன், பாதுகாப்பு உள்ளிட்ட சந்தேகங்கள் மற்றும் தகவல் அளித்திட 181 என்ற மகளிர் உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்ற விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் நலன், பாதுகாப்பு, குழந்தைத் திருமணங்கள் தடுப்பு சார்ந்த சந்தேகங்கள் மற்றும் தகவல் அளித்திட 1098 குழந்தைகள் உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்கிற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். “குட் டச். பேட் டச்” குறித்து கூட்டத்தில் விவாதித்து பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் அளவில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு பிரதிநிதி ஒருவர், ஆசிரியரல்லாத பணியாளர், தேவைப்பட்டால் வெளிநபர் ஒருவர் என 8 பேர் அடங்கிய மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

The post பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு வரும் 26ல் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: