வால்பாறை: வால்பாறை சோலை ஆற்றின் முக்கிய கிளை ஆறுகளான மேல் நீராறு, நடுமலை ஆறு ஆகியவற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கோடைகாலம் தொடங்கியது முதல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் இயற்கை ஊற்றுகளில் நீர் சுரப்பது குறைந்துள்ளது. இதனால் ஆறுகள் ஓடைகளாக மாறிவருகிறது. இந்நிலையில் வனப்பகுதிகளில் கடல் மட்டத்திற்கு மேல் 400 மீட்டருக்கு மேல் குறைவாக உள்ள பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் இடம் பெயர்ந்து 600 மீட்டருக்கு மேல் உள்ள பசுமை மழைக்காடுகள் பகுதிகளுக்கு வருகிறது. குறிப்பாக செந்நாய்கள், யானைகள், மான்கள், எறும்பு திண்ணிகள் உட்பட விலங்கினங்கள் பசுமையை நோக்கி படையெடுத்து வருகிறது. இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் செந்நாய் மற்றும் காட்டுமாடு கூட்டங்கள் முகாமிட்டு வருகிறது.
தோணிமுடி, வாட்டர்பால்ஸ், கருமலை உள்ளிட்ட பகுதிகளில் செந்நாய் கூட்டங்கள் சுற்றித்திரிகிறது. எனவே வனவிலங்குகளுக்கு காட்டுத்தீயால் வனம் அழிந்து உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் வனப்பகுதியில் தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்தி வருகின்றனர். வால்பாறையில் பகுதியில் உள்ள அக்காமலை புல்வெளி பகுதியில் வனவிலங்குகளையும், வனத்தையும் வன தீயிலிருந்து காக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து மானாம்பள்ளி வால்பாறை வனச்சரகர் கிரிதரன் கூறுகையில், 2 நாட்களுக்கு முன் சிறிதளவு மழை பெய்ததால் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. மீண்டும் வெயில் துவங்கியுள்ளதால் இப்பணிகள் தொடங்கி உள்ளோம் என்றார்.
The post அக்காமலை புல்வெளி பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.