குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டப்பணிகள் முதல் மலைதோட்ட காய்கறி சாகுபடி வரை ஏராளமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட், பீகார், அஸ்ஸாம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த வடமாநிலத்தவர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டத் தொழிலில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தனியார் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர்கள் பல்வேறு வசதிகளுடன் குடியிருப்புகளும் ஏற்படுத்தி கொடுத்து,அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதேப்போல் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஹோலி பண்டிகையன்று விடுமுறை அளிக்காத நிலையில், அவர்களுக்கு ஓய்வு இடைவெளி கொடுக்கப்படும் நேரங்களில் தற்போது வரை ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். இதனிடையே நேற்று நான்சச் பகுதியில் உணவு இடைவெளிக்கு வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வர்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற பண்டிகை காலங்களில் தனியார் தோட்டங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று சக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வடமாநில தொழிலாளர்கள் ஹோலி கொண்டாட்டம் appeared first on Dinakaran.