கொளுத்தும் வெயிலால் பால் வெட்டு மந்தம்: ரப்பர் விலை மீண்டும் ரூ.200ஐ நெருங்கியது


நாகர்கோவில்: வெயில் கொளுத்துகின்ற நிலையில் பால் வெட்டு மந்த கதியில் நடந்து வருவதால் ரப்பர் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் ரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது. குமரியில் பிரதான பண பயிர்களில் ஒன்றாக ரப்பர் உள்ளது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஹெக்டரில் ரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது. ரப்பர் ேதாட்டங்களில் பால் வடித்தல், ரப்பர் ஆலை தொழில், ரப்பர் நாற்று பண்ணைகள் அமைத்தல், ரப்பர் மார்க்கெட் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று வருகின்றனர். கோடைகாலம் தொடங்கும் முன்னரே வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. வெயில்காலம் தொடங்கியுள்ளதால் ரப்பர் பால்வெட்டு பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது.

இதனால் சந்தையில் ரப்பர் சரக்கு வரவு குறைந்துள்ளது. இது ரப்பர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்வதேச சந்தையில் ரப்பர் விலை உயர்ந்துள்ளதும், கண்டெய்னர் வாடகை செலவு அதிகரித்துள்ளதும், ரப்பர் இறக்குமதியில் லாபம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து அதிக அளவு சரக்கை கொள்முதல் செய்ய டயர் கம்பெனிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதனால் ரப்பர் விலை உயர தொடங்கியுள்ளது.கோட்டயம் மார்க்கெட்டில் ஆர்.எஸ்.எஸ் 4 கிரேடு ரப்பர் விலை நேற்று ரூ.196 ஆக இருந்தது. இதனை போன்று ஆர்.எஸ்.எஸ்-5 கிரேடு ரப்பர் விலை ரூ.192.50 ஆக இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 2வது வாரத்தில் ஆர்எஸ்எஸ் 4 கிரேடு ரப்பர் விலை ரூ.132.50 ஆக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் கிரேடு-5ன் விலை ரூ.130 ஆக இருந்தது. பின்னர் ரப்பரின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.

தற்போது சர்வதேச சந்தையில் விலை ரூ.208 ஆக உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரப்பர் சரக்கை இருப்பு வைத்து விற்கவும் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் ரப்பர் பாலுக்கு விலை அதிகம் கிடைப்பதால் ரப்பர் ஷீட் தயாரிப்பு அளவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரப்பர் விலை உயர்வு விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கொளுத்தும் வெயிலால் பால் வெட்டு மந்தம்: ரப்பர் விலை மீண்டும் ரூ.200ஐ நெருங்கியது appeared first on Dinakaran.

Related Stories: