வள்ளிமலை கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி திருவிழாவிற்கு வந்தபோது சோகம்

பொன்னை, மார்ச் 15: வள்ளிமலை கோயில் குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். வேலூர் மாவட்டம், வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இவ்விழாவை காண கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த ஜெகநாதன் மகன் தீபன்(14) மற்றும் அவரது நண்பர்கள் வந்துள்ளனர். பின்னர், நேற்று மாலை கோயில் அருகே உள்ள சரவணபொய்கை குளத்தில் தீபக் மற்றும் அவரது நண்பர்கள் குளித்துள்ளனர். அப்போது திடீரென நிலைமாறிய தீபக் குளத்தில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கருணா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் இருந்து தீபக் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவை காண வந்த சிறுவன் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வள்ளிமலை கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி திருவிழாவிற்கு வந்தபோது சோகம் appeared first on Dinakaran.

Related Stories: