ஒடுகத்தூர், மார்ச் 5: ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் நேற்று நடந்த எருது விடும் திருவிழாவில் இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்தது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. விழாவிற்கு, நாட்டாண்மை கன்னியப்பன், பழனி, கணாச்சாரி விஜயன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா பாபு, ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி கருணாநிதி, துணைத் தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வருவாய்த் துறையினர், போலீசார் மற்றும் விழாக்குழுவினர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டு விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னர் வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை நோக்கி புடை சூழ ஓடுபாதையில் திரண்டிருந்த இளைஞர்களின் கூட்டத்தை சிதறடித்து கொண்டு புழுதி பறக்க காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் கை தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்ததால் எருது விடும் விழா கலைகட்டியது. அப்போது, ஓடுபாதையில் திரண்டிருந்த இளைஞர்களை காளை முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும், 2 பேர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து திரண்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோரின் மேற்பார்வையில் சுமார் 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறைந்த நேரத்தில்இலக்கை அடைந்த காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.70 ஆயிரம், 2வது பரிசு ரூ.50 ஆயிரம், 3வது பரிசு 35 ஆயிரம் என மொத்தம் 48 பரிசுகள் வழங்கப்பட்டது.
The post இலக்கை நோக்கி இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த காளைகள் மாடுகள் முட்டி 14 பேர் காயம் ஒடுகத்தூர் அருகே எருது விடும் விழா appeared first on Dinakaran.