×

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி

சென்னை: தமிழ்நாட்டில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1983 மற்றும் விதிகள் 1988 ஆகியவற்றின் கீழ், பதிவு செய்யப்பட்ட 1,115 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் 2.59 இலட்சம் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பரந்த எண்ணிக்கையிலான கைத்தறி இரகங்கள், அவற்றின் சிறந்த கைவினைத்திறன் மற்றும் தனித்துவத்திற்காக, உலகளவில் புகழ் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், திருபுவனம் பட்டுச் சேலைகள், ஆரணி பட்டுச் சேலைகள், பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடிச் சேலைகள், கோயம்புத்தூர் கோரா காட்டன் சேலைகள், பரமக்குடி சேலைகள், சேலம் வெண் பட்டு வேட்டிகள், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக துணி இரகங்கள் போன்ற கைத்தறி இரகங்கள் தனித்துவ வேலைப்பாடு மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றதாகும்.

2024-2025-ஆம் ஆண்டு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின்போது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் இரகங்களின் விற்பனையினை அதிகரிக்க ஏதுவாக தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் உதவியுடன் திருப்பூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மாநில அளவிலான கண்காட்சி நடத்தப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையிணை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி துறையும், இந்திய அரசின் ஐவுளித் துறையும் இணைந்து நடத்தும் கைத்தறி கண்காட்சிகள் மற்றும் விற்பனையகங்கள் 27.12.2024 முதல் 13.01.2025 வரை திருச்சி, கோயம்பத்தூர், திருப்பூர், மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

திருச்சியில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தில்லை நகரில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களால் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் முன்னிலையில் 27.12.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

அதே நாளில் கோயம்புத்தூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை கவுண்டம்பாளையம் கல்பனா திருமண மண்டபத்தில் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் திரு.வி.செந்தில் பாலாஜி அவர்கள் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. இத்துவக்கவிழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டார்கள்.

திருப்பூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை லட்சமி நகரில் அமைந்துள்ள குலாலர் திருமண மண்டபத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் ஆகியோர் இணைந்து 28.12.2024 அன்று துவக்கி வைத்தார்கள். இத்துவக்கவிழாவில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் அன்றைய நாளில் சேலத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை சேலம் அழகாபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.இராஜேந்திரன் அவர்கள் இணைந்து இவ்விழாவினை துவக்கி வைத்தார்கள். இவ்விழாவில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி மற்றும், சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, கலந்து கொண்டார்கள்.

மேற்கண்ட நான்கு கண்காட்சி துவக்க விழாக்களிலும், நகராட்சி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் வி.அமுதவல்லி, கைத்தறி இயக்குநர் அ.சண்முக சுந்தரம் அவர்களும் சரக உதவி/துணை இயக்குநர்களும், அரசு அலுவலர்களும் மற்றும் நெசவாளர் பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும் பட்டு கைத்தறி இரகங்களின் விற்பனையினை அதிகரிக்கவும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் இருப்பு தேக்கத்தினை குறைத்திடவும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பட்டு கைத்தறி கண்காட்சி மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் அமைந்துள்ள எல்.என்.எஸ்.மகாலில் 30.12.2024 அன்று முதல் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சியில் உண்மையான மற்றும் தரமான தூயப்பட்டு மற்றும் தூய ஜரிகை இரகங்கள் 55 சதவீதம் வரையிலான சிறப்பு தள்ளுபடியுடன் நல்ல சகாய விலையில் கிடைக்கின்றது. மேற்கண்ட கண்காட்சி துவக்கவிழாக்களில் ரூ.2.05 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் 871 நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி துவக்க விழா (திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் மற்றும் மதுரை) ஒவ்வொரு கண்காட்சியிலும் 70 முதல் 100 வரையிலான கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கு பெற்று, 60 அரங்குகள் அமைக்கப்பட்டு பாரம்பரியம்மிக்க கைத்தறி துணி இரகங்கங்களான காஞ்சிபுரம் பட்டு, திருப்புவணம் பட்டு, ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், காட்டன் வேட்டிகள் , சட்டைகள், மதுரை சுங்குடி சேலைகள், சின்னாளப்பட்டி சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், மென் பட்டு சேலை இரகங்கள், வாழை நாரில் தயாரிக்கப்பட்ட சேலைகள், மூங்கில் நார் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சேலைகள், பழங்குடி இன மக்களால் தயார் செய்யப்பட்ட தோடா சால்வைகள், மேலும் வீட்டு உபயோக பொருட்களான சென்னிமலை பெட்சீட், தலையணை உறை, திரைசீலைகள், மெத்தை விரிப்பு போன்ற பிரத்யோக வேலைப்பாடு உள்ள கைத்தறி இரகங்கள் வெகு சிறப்பாக விழாக்கால சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேற்கண்ட கண்காட்சிகளில் நாளது தேதிவரை ரூ.2.54 கோடி அளவிற்கு விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எதிர்வரும் பண்டிகை நாட்களில் விற்பனை அதிகரிக்கப்பட்டு சுமார் ரூ.10.00 கோடிக்கும் மேல் விற்பனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,எனவே பொது மக்கள் அனைவரும் பங்குபெற்று பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

The post மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரா,...