×

விளைநிலங்களுக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம்; விவசாயிகளை மிரட்டும் யானைகள் கூட்டம்: பல்லாயிரக்கணக்கான வாழை, தென்னை, பனை மரங்கள் நாசம்


களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம் மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்தது. 10 நாட்களில் பல்லாயிரக்கணக்கான வாழைகளையும், நூற்றுக்கணக்கான தென்னை, பனை மரங்களையும் யானைகள் துவம்சம் செய்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த 10 நாட்களாக யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த யானைகள் மலையடிவார கிராமமான சிதம்பரபுரம், சிவபுரம், கள்ளியாறு, மேலவடகரை பகுதிகளில் முகாமிட்டு உணவுக்காக வாழை, நெல், தென்னை, பனை மற்றும் விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன.

இதுவரை பல்லாயிரக்கணக்கான வாழைகளையும், நூற்றுக்கணக்கான தென்னை, பனை மரங்களையும் யானைகள் கூட்டம் நாசம் செய்துள்ளதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி வனக்காப்பாளர், வன காவலர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் யானைகள் நடமாட்டம் காணப்படும் பகுதிகளில் விடிய விடிய தீப்பந்தங்களுடன் ரோந்து சுற்றி வருகின்றனர். ஆங்காங்கே தீ மூட்டி தடுப்புகள் ஏற்படுத்தியும், வெடிகள் வெடித்தும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் மலையடிவார விளைநிலங்களையே சுற்றி வருகிறது.

கடந்த சில நாட்களாக சிதம்பரபுரத்தில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டம் தற்போது அங்கிருந்து நகர்ந்து, மஞ்சுவிளை பகுதிக்கு குடிபுகுந்துள்ளன. நேற்று அதிகாலையில் குட்டிகள் உள்பட 7 யானைகள் மஞ்சுவிளை அரசபத்து விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சாய்த்து அட்டகாசம் செய்தன. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இந்த வாழைகள் பயிர் செய்யப்பட்டு 6 மாதமான ஏத்தன் ரக வாழைகள் ஆகும். நாசமான வாழைகள் மஞ்சுவிளையை சேர்ந்த பக்தர்பாண்டி (50), காமராஜ்நகரை சேர்ந்த சீமான் (37), முத்துபட்டன் (42) ஆகியோருக்கு சொந்தமானது ஆகும். மேலும் சில்கிஸ் சாமுவேல் என்பவரது தோட்டத்தில் சோலார் வேலிகளையும் யானைகள் உடைத்துள்ளது. களக்காடு பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக யானைகள் தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

யானைகளால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல அச்சப்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே யானைகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாசமான பயிர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு
இதுபற்றி நகராட்சி கவுன்சிலர் சிம்சோன் துரை கூறுகையில், ‘அரசபத்து பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் லட்சக்கணக்கான வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகள் ஒரு புறம் சேதப்படுத்தினால் தற்போது யானைகளும் மொத்தம், மொத்தமாக வாழைகளை நாசம் செய்து வருகிறது. வாழைகளை எப்படி யானைகளிடமிருந்து காப்பாற்றுவது என்பது தெரியவில்லை. வாழைகளுக்கு உரிய நேரத்தில் உரமிட்டு, தண்ணீர் பாய்த்து, கண்களை போல விவசாயிகள் பாதுகாத்து வரும் நிலையில் நொடி பொழுதில் யானைகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் நிலைகுலைந்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என தெரியவில்லை’ என்றார்.

The post விளைநிலங்களுக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம்; விவசாயிகளை மிரட்டும் யானைகள் கூட்டம்: பல்லாயிரக்கணக்கான வாழை, தென்னை, பனை மரங்கள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Kalakkadu ,Nellai district ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்