- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சட்டப்பேரவை
- யூஜிசி
- சென்னை
- அஇஅதிமுக
- காங்கிரஸ்
- மதிமுக
- V.C.K.
- இந்திய கம்யூனிஸ்ட்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- தின மலர்
சென்னை : யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அதிமுக, காங்கிரஸ், மதிமுக, வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பேரவையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்துக்கு புரட்சி பாரதம், த.வா.க., கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகளும் வரவேற்பு அளித்துள்ளன. ஆனால், முதலமைச்சர் தனித் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் : நீட்-க்கு எதிராக முதலமைச்சர்களை ஒருங்கிணைத்ததுபோல் இதற்கு எதிராகவும் ஒருங்கிணைக்க வேண்டும். ஒன்றிய பாஜக பாசிச அரசின் அடாவடி சட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் போரிட வேண்டும்.
கொ.ம.தே.க ஈஸ்வரன் : தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக செயல்பாடுகளில் என்ன குறைகளை கண்டீர்கள்? என ஆளுநருக்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். அதிகாரம் வேண்டும்; ஆனால் பொறுப்பு வேண்டாம் என ஆளுநர்கள் நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. பல்கலை.யில் ஏதேனும் நடந்தால் பொறுப்பேற்க முடியாது; ஆனால் நிர்வகிக்க அதிகாரம் மட்டும் தேவையா?.
பாமக : பல்கலைக்கழகங்கள் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; இந்த தீர்மானம் உரிமை காக்கும் தீர்மானம்; கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை அரசு முன்வைக்க வேண்டும். துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க வேண்டும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி : தமிழக மக்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசால் கொண்டுவரப்படும் எந்த சட்டங்களையும் அதிமுக எதிர்க்கும்; தன்னாட்சி பறிப்பு, மாநிலத்தின் உரிமைகள் பாதிப்பை அதிமுக கண்டிக்கிறது; புதிய விதிமுறை குறித்த அறிக்கையை யுஜிசி தன்னிச்சையாக வெளியிட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. நீட், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியதுபோல யுஜிசி விவகாரத்திலும் முதல்வர் கடிதம் எழுத வேண்டும். யுஜிசி விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு கடுமையான எதிர்ப்பை அதிமுக பதிவு செய்கிறது.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் : முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஏற்க முடியாது. இது வரைவு அறிக்கை; இறுதியானது அல்ல; வெளிநாட்டு மாணவர்களுடன் நம் மாணவர்கள் போட்டி போடும் வகையில், கல்வி தொடர்பாக திருத்தங்கள் வேண்டும்.
The post யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!! appeared first on Dinakaran.