- கூட்டுறவு கடன் சங்கம்
- செங்கம்
- முதன்மை வேளாண் கூட்டுறவு கடன்
- நயம்பாடி கிராமம்
- செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம், ஜன.9: செங்கம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை பூட்டி பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நயம்பாடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்றவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு அரசு அறிவித்தபடி கடன் தள்ளுபடி கிடைத்தது. அதில், உரிய தகுதி இருந்தும் சிலருக்கு தள்ளுபடி கிடைக்கவில்லை என்றும், வட்டியுடன் சேர்த்து கடன் தொகையை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தார்களாம். இதனால் மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த சில பெண்கள் நேற்று நயம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது, 4க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உள்ளே இருக்கும்போதே அலுவலகத்தை பூட்டி பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து கலைந்து செல்ல செய்தனர். தொடர்ந்து போலீசார், அலுவலக பூட்டை திறந்து அதிகாரிகளை விடுவித்தனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்துக்கு பூட்டு 2 மணி நேரம் சிக்கித்தவித்த அதிகாரிகள் செங்கம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.