×

விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தல் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட

திருவண்ணாமலை, ஜன.8: திருவண்ணாமலை பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களிலும் மாதந்தோறும் முதல் செவ்வாய் கிழமையன்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கத்தில், தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன் தலைமையில் நடந்தது. அதில், வேளாண் உதவி இயக்குநர்கள் முத்துக்குமரன், கோபாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, பிடிஓ பிரத்திவிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் விபரம்: திருவண்ணாமலை மாவட்டத்தில், பெஞ்சல் புயலால் கடுமையான பயிர் சேதம் ஏற்பட்டது. நெற்பயிரில் தேங்கிய மழை வெள்ளம் வடியாததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர் சேதமடைந்தது. அதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். சானானந்தல் கிராம ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும்.

வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் உளுந்து, மணிலா விதைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். உள்ளாட்சி பதவிகாலம் முடிந்துவிட்ட நிலையில், எந்தவித தாதமும் இல்லாமல் கிராமங்களுக்கு தேைவயான வசதிகளை தனி அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி செய்ய வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில், கிராமங்களில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பரவலாக பயன்பெறும் வகையில் வேலை வழங்க வேண்டும். அதிகபட்ச கூலியை மதிப்பிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதைத்தொடர்ந்து, விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) குமரன் தெரிவித்தார்.

The post விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தல் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட appeared first on Dinakaran.

Tags : cyclone Penjal ,Tiruvannamalai ,Taluk ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால்...