மஞ்சூர், ஜன.8: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மஞ்சூர், மெரிலேண்டு, பெங்கால்மட்டம், கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இப்பகுதிகளை சுற்றிலும் உள்ள தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களுக்குள் காட்டு மாடுகள் கூட்டமாக புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது.
தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் காட்டு மாடுகளால் தொழிலாளர் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சமீபகாலமாக பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து மிகுதியாக உள்ள கடைவீதி, பஜார் பகுதிகளிலும் காட்டு மாடுகள் சர்வ சாதாரணமாக வலம் வருவது வாடிக்கையாகி உள்ளது. நேற்று பிற்பகல் மஞ்சூர் மெரிலேண்டு பகுதியில் ராட்சத காட்டு மாடு ஒன்று சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது.
அடிக்கடி சாலையின் குறுக்கே சென்றதால் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிகுள்ளானார்கள். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் நடுரோட்டில் நின்ற காட்டு மாட்டை கண்டு அச்சத்துடனேயே பயணித்தார்கள். இதேபோல், நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் மஞ்சூர் பள்ளிமனை பகுதியில் இருந்து காட்டு மாடு ஒன்று கரியமலை சாலையில் சாவகாசமாக நடந்து சென்றது. இதை கண்டு பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்நிலையில் எதிரே வந்த வாகனங்களை பொருட்படுத்தாமல் நடந்து சென்ற காட்டு மாடு அரசு மருத்துவமனை அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.
The post மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சாலையில் உலா வரும் காட்டு மாடு appeared first on Dinakaran.