×

உத்ராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியதுஏராளமான பக்தர்கள் தரிசனம் தொடர்ந்து 10 நாட்கள் திருவீதியுலா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

 

திருவண்ணாமலை, ஜன.6: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாக நேற்று தொடங்கியது. வரும் 14ம் தேதி வரை தொடர்ந்து சுவாமி திருவீதியுலா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில், சிறப்புக்குரியது மார்கழி மாதத்தில் நடைெபறும் உத்ராயண புண்ணியகால உற்சவமாகும். அதேபோல், இத்திருக்கோயிலில் நடைபெறும் 4 உற்சவங்கள், கொடியேற்றத்துடன் தொடங்குவது மரபாகும். அதன்படி, கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம், ஆனி பிரமோற்சவம் மற்றும் மார்கழி மாதத்தில் உத்தராயண புண்ணியகால உற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக, அண்ணாமலையார் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். மேலும், ஆடிப்பூர பிரமோற்சவத்தின் தொடக்கமாக, அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

இந்நிலையில், மார்கழி மாதத்தில் நடைபெறும் உத்ராயண புண்ணியகால பிரமோற்சவ கொடியேற்றம் நேற்று காலை 6.40 மணியளவில் அண்ணாமலையார் கோயிலில் விமரிசையாக நடந்தது. அப்போது, கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள 64 அடி உயரமுள்ள தங்கக்கொடிமரத்தில் திருமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.
அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோர் தங்கக்கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாடவீதியில் சுவாமி பவனி நடந்தது. இந்நிலையில், உத்ராயண புண்ணியகால பிரமோற்சவத்தை முன்னிட்டு, வரும் 14ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் சுவாமி மாடவீதியுலா நடைபெறும். விழாவின் நிறைவாக, வரும் 14ம் தேதி தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர், வரும் 15ம் தேதி பிரசித்தி பெற்ற திருவூடல் திருவிழாவும், 16ம் தேதி மறுவூடல் விழாவும் நடைபெற உள்ளது. அதையொட்டி, விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

The post உத்ராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியதுஏராளமான பக்தர்கள் தரிசனம் தொடர்ந்து 10 நாட்கள் திருவீதியுலா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Uthrayana Punnyakala Utsavam ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Swami Thiruveediyula ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...