தர்மபுரி: ஏரியூர் அருகே பூச்சூர் கிராமத்தில் 3 விவசாயிகளின் 4.5 ஏக்கரில் சாகுபடி செய்த சாமந்தி செடிகள் கருகி காய்ந்தது. இழப்பீடு வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே பூச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (எ) வேங்கமுத்து(44).
அதே பகுதியை சேர்ந்த குழந்தைசாமி (62), கணேசன் (57) ஆகியோர், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் மற்றும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பூச்சூர் கிராமத்தில் தலா ஒன்றரை ஏக்கர் என மொத்தம் 4.5 ஏக்கரில், 120 நாட்களுக்கு முன் ெபாங்கல் பண்டிகையை எதிர்நோக்கி சாமந்திப்பூக்களை சாகுபடி செய்தோம். பூக்கள் தரமாக இருப்பதற்கு, சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டியில் ஒரு கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கினோம். அந்த மருந்தை ஒரே நேரத்தில் மூன்று வயல்களிலும் தெளித்தோம். மறுநாளில் இருந்து சாமந்திப்பூ செடிகள் காயத்தொடங்கின. சில நாட்களில் செடிகள் கருகி காய்ந்தது.
ஆனால், களைச்செடிகள் மட்டும் பச்சைப்பசேல் என்று இருக்கிறது. இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட பூச்சி மருந்து கடையை கலெக்டர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
The post பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததால் 4.5 ஏக்கரில் கருகிய சாமந்திப்பூ செடிகள்: இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.