×

தமிழக ஆளுநரை கண்டித்து திமுக போராட்டத்துக்கான அனுமதியை எதிர்த்து பாமக முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பாமக அனுமதி கோரியது. ஆனால், 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என கூறி போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இருப்பினும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கைதும் செய்தது. காவல் துறையினர் அனுமதி மறுத்ததை எதிர்த்து பாமக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இந்த பின்னணியில், ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்த திமுகவுக்கு இன்று காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன் பாமக தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதி வேல்முருகன், இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். உடனே, மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதனை அவசர வழக்காக பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் பாலு கேட்டு கொண்டார். இதையடுத்து அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி, மனுத்தாக்கல் செய்து, எண்ணிடப்படும்பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

The post தமிழக ஆளுநரை கண்டித்து திமுக போராட்டத்துக்கான அனுமதியை எதிர்த்து பாமக முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : PMK ,DMK ,Tamil Nadu ,Governor ,Chennai ,Anna University ,HC ,
× RELATED தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக...