எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின்கம்பங்கள் மாற்றப்படுமா?.. வியாபாரிகள் எதிர்பார்ப்பு


பொன்னேரி: பொன்னேரி அடுத்த, பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் மேம்பாலம் அருகே பல வருடங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. தற்போது, இந்த மின்கம்பங்கள் முற்றிலும் பழுதாகி, சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், இந்த மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்நிலையில், காற்று சற்று வேகமாக வீசினால், மின்கம்பிகள் இரும்பு பலகையில் உரசி விபத்து ஏற்படக்கூடும் என வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, மின்வாரியதிற்கு அப்பகுதி மக்கள் பலமுறை தகவல் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக இந்த மின்கம்பங்களை மாற்றித் தர மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தாழ்வான வயர்கள் : ஆர்.கே.பேட்டை ஒன்றியம் விலாசபுரம், அய்யனேரி ஆகிய கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரு கிராமங்களில் விவசாய நிலத்திற்கு மேல் செல்லும் மின்சார வயர் மிகவும் தாழ்வாகச் செல்வதாகவும், கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாலும் நிலத்தில் இருந்து நெல் மூட்டைகளை தலையில் தூக்கிச் செல்லும்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாயிகள் பயிர் செய்வதற்கு இழுவை இயந்திரம் மூலம் ஏர் உழுவதற்குச் செல்ல முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்சார வாரியம், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இந்த கிராமங்களில் கைக்கு எட்டும் தூரத்தில் செல்லும் மின்சார வயரை உயர்த்தி அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

The post எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின்கம்பங்கள் மாற்றப்படுமா?.. வியாபாரிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: