பொங்கல் விழாவையொட்டி எருதாட்டத்திற்கு காளைகளை தயார் படுத்தும் இளைஞர்கள்

போச்சம்பள்ளி: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருதாட்டத்திற்கு காளைகளை தயார்படுத்தும் பணியில் கிராமத்து இளைஞர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டு முழுவதும் உழைக்கும் காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் மாட்டுப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் விழா 7 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் எருதாட்டம் பிரபலம். இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காளைகளுக்கு தீவிர பயிற்சியளித்து வருகின்றனர்.

இதுகுறித்து எருதாட்ட ஆர்வலர்கள் கூறியதாவது: ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருதாட்டம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நடைபெறும் விளையாட்டுகளில், காளைகளுடன் மல்லுக்கட்டி பரிசு பொருட்களை வெல்வதை இளைஞர்கள் வீரமாக கருதுகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் விழாவின்போது நடைபெறும் எருதாட்டம் பிரசித்தம். அலங்கரிக்கப்பட்ட காளைகளை ஊர் பொது இடங்களுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று, ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு வேடிக்கை காட்டுவர். தொன்று தொட்டு நடைபெற்று வரும் இப்போட்டியில், சீறிப்பாயும் களைகளை அடக்குவோருக்கும், போட்டியாளர்களை பந்தாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசு, தங்க நகைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அள்ளி வீசப்படும். அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசாரின் அனுமதி பெற்று, எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் விழாவிற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக கிராமப்புறங்களில் தங்கள் வளர்த்து வரும் காளைகளுக்கு தீவிர பயிற்சியளித்து வருகிறார்கள். போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், கடந்த 2 மாதங்களாக காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். நீர் நிலைகளுக்கு அழைத்துச் சென்று நீச்சல் பயிற்சி அளிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், விவசாய நிலங்களில் மண்மேடுகள் அமைத்து குத்தி கிளறச் செய்தல், மரபொம்மைகளை காட்டி ஆவேசமாக முட்ட செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். கிராமப்புற இளைஞர்கள் கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு அதிகளவில் காளைகளை வளர்த்து, போட்டிக்கு தயார்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post பொங்கல் விழாவையொட்டி எருதாட்டத்திற்கு காளைகளை தயார் படுத்தும் இளைஞர்கள் appeared first on Dinakaran.

Related Stories: