(வல்லாள கோபுரக் கதை)
“இது சிக்கலானச் சூழ்நிலை அரசே. கோயிலேயானாலும், பொதுவெளியில் பேசக்கூடிய விஷயமில்லை. அரசவையை கூட்டித்தான் ஆலோசிக்கவேண்டும்.”“அப்போது, மாலை அரசவை கூடவேண்டுமென்கிற என்ஆணையை முன்மொழியுங்கள். இது மிகவும் அவசரகாலக்கூட்டமென சொல்லுங்கள். அனைத்து அமைச்சர்களும், உபதளபதிகளும் கண்டிப்பாக வரவேண்டுமென உத்தரவிடுங்கள். எல்லாவற்றுக்கும் முன், காம்ப்லிதேசத்தின் தற்போதைய நிலவரம் குறித்தறிய ஒற்றனை அனுப்புங்கள்.
காம்ப்லித்தேவன் குறிப்பிட்டதுபோல, அவனிடம் தஞ்சமடைந்த குல்பர்க்காவின் ஆளுநரும், அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பிவிட்டார்களா என துப்பறியச் சொல்லுங்கள். தப்பித்தவர்கள், நம் துவாரசமுத்திரத்தை அடைந்தால், அவர்களை எப்படி எதிர்கொள்வதென, அங்கிருக்கும் நம் பொறுப்புத்தளபதிக்கு, கட்டளையிடுங்கள். நமக்கு காலஅவகாசம் குறைவாகத்தானிருக்கிறது. எனவே, எல்லாம் விரைவாக நடக்கவேண்டும். நான் பயணக்களைப்புத்தீர, சிறிது ஓய்வுவெடுத்துவிட்டு, வந்துவிடுகிறேன். மாலைசந்திப்போம்.” என படபடவென உத்தரவிட்டு, மன்னர் வீரவல்லாளன் கிளம்பினார்.
வேகவேகமாகப்பேசிவிட்டு, படைவீரர்கள்சூழ, விரைவாக நடந்துபோய், தேரேறி அரண்மனைக்கு கிளம்பிப்போகிற மன்னரை, மாதப்பதண்ட நாயகர், கவலையோடு பார்த்தபடி பெருமூச்சுவிட்டார். “கோபுரக்கட்டுமானப்பணிகள் தீவிர மடைந்துள்ள நிலையிலா இப்படியொரு பிரச்சனை வரவேண்டும்?. காலம் என்மன்னரை நிம்மதியாகவே விடாதுபோல” என முணுமுணுத்தவர், தலையை சிலுப்பிக் கொண்டு, இயல்புக்குத்திரும்பி, மன்னரின்கட்டளையை, வாய்மொழியுத்தரவாக எல்லோருக்கும் அனுப்பினார்.
“அவசரகாலக்கூட்டமா?, அப்படியென்றால் ஏதேனும் போர்மேகம் சூழ்ந்துள்ளதா” என விசாரித்த, ஒரு அவசரகுடுக்கை அமைச்சனிடம், “பேசாமல், வாயை மூடிக்கொண்டு வந்துசேர்” என சீறினார். உபதளபதிகளிடம், தனது தனிஉத்தரவாக, “எதற்கும், வீரர்களோடு துவாரசமுத்திரத்திற்கு போகத்தயாராகயிருங்கள்” என சொல்லிவைத்தார்.
இடையே, துவாரசமுத்திரத்தின் பொறுப்புத்தளபதி வேலாயுதமாறனாருக்கு, ஒற்றன்மூலம் தகவலனுப்பினார். சற்று கோட்டைக்காவலை பலப்படுத்தும்படி, எச்சரிக்கை செய்தார். வீரர்களை கண்கொத்திப்பாம்பாக இருக்கச்சொன்னார். அபயமென எவர்வந்தாலும், உள்ளேயழைக்கவேண்டாம் உத்தரவு வரும்வரை காத்திருக்கவேண்டுமென்றார். ஆனால், எண்களையும், குழந்தைகளையும் மட்டும், தற்காலிகமாக உள்ளேயழைத்து, தனியறையில் அமர்த்தச்சொன்னார். வேற்றுமதமானாலும், பெண்களை மரியாதையாகநடத்த, கடுமையாகக்கட்டளையிட்டார்.
நாலாபக்கமும் உத்தரவுகள் பறந்தன. ஹொய்சாலத்தின் அமைச்சரவை, நெய்விட்டு வளர்த்த யாகத்தீப்போல, திகுதிகுவென பரபரப்பாகியது. கதிரவன்மறைய, இன்னுமிரண்டுநாழிகைகள் இருப்பதற்குமுன்பாக, மொத்தமாய் அவையில் கூடியது. எல்லோரும் கூடிய சிலநிமிடங்களில், அரசிகளோடு அவைக்கெழுந்தருளிய மன்னரை, புகழ்பாடி வரவேற்றது.
உள்ளேநுழைந்த மன்னர் வீரவல்லாளன் அரியாசனத்திலமர்ந்ததும், நேரடியாக விஷயத்திற்குவந்தார். “நல்லது. அனைவரும் விஷயமறிந்திருப்பீர்களென நினைக்கிறேன். இனியென்ன செய்யலாம்? என்னயோசனை வைத்திருக்கிறது இந்தச்சபை? அமைச்சர்களில் மூத்தவர்களான சிங்கரங்கநாதனும், பீமராயனும், முதலில் பேசலாம்” என்றார்.
மன்னர் அப்படிக்கூறியதும், எழுந்த அமைச்சர்களில் மூத்தவர் சிங்கரங்கநாதன், “அரசே” என ஆரம்பிக்கும்போதே, வாயில்காப்பாளன் அவைக்குள்நுழைந்து, “அவசரசெய்தி” என்பதற்கான சைகை முத்திரைக்காண்பித்தான். அவன்சைகை புரிந்துகொண்ட சிம்மரங்கநாதன், “விஷயமென்ன சொல்?” என்றதும், வாயில்காப்போன் குனிந்து,பணிந்து,நிமிர்ந்து, “துவாரசமுத்திரத்தின் பொறுப்புத்தளபதி வேலாயுதமாறனாரிடமிருந்து, அவசரச்சேதியோடு, ஆள் வந்திருக்கிறது” என்றான்.
மன்னரோடு சேர்ந்து மொத்தசபையுமதிர்ந்து. “என்ன தகவலென்று தெரியவில்லையே” என கலவரத்துடன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, “வந்தவனை உடனே வரச்சொல்” என மன்னர் வீரவல்லாளன் கத்தினார். மன்னரின் கத்தலுக்கு மிரண்டு, விரைவாய் வெளியேறிய வாயில் காப்போன், வேலாயுதமாறனாரிடமிருந்து வந்தவனை உள்ளேயனுப்பினான். வந்தவனும்,குனிந்து,பணிந்து, நிதானமாக நிமிர்ந்து, மன்னர்துதி பாட, கடுப்பாகி இடைமறித்த மன்னர், “வந்தவிஷயத்தை, முதலில்சொல்லடா” என இம்முறை கோபமாக சீறினார்.
வந்தவன் “நேற்று விடிகாலை இருட்டின்போது, குல்பர்காவின் ஆளுநர் பஹாவுதீன் குர்ஷாப்பும், அவரது குடும்பத்தாரும், அவர்களது சிலபடைவீரர்களும், அபயம்வேண்டி, ரகசியமாக நமது துவாரசமுத்திரத்தெல்லையை அடைந்துள்ளனர். அவசரசேதியாக இதைச்சொல்லி, நமது எதிரிகளான அவர்களை ஏற்பதா,மறுப்பதா என்ற மன்னரின் உத்தரவைவேண்டி வேலாயுத மாறனார் காத்திருக்கிறார்.’ என்று உரத்தகுரலில்,சொன்னான்.
அவன் சொன்னதைக்கேட்டு சபை, மீண்டும் மிரண்டது. தளபதி மாதப்பதண்ட நாயகர் தலையில் கையை வைத்துக்கொண்டார். அமைச்சர் சிங்கரங்கநாதன் அதிர்ச்சியோடு ஆசனத்தில் சாய்ந்தார். இளையராணி சல்லம்மா புரியாதமனநிலையில் குழம்பினார். மூத்தராணி மல்லம்மாவோ, “தங்கை சல்லம்மா கண்டகனவு பலித்துவிடுமோ’ என பயந்தார்.
அவையினர் எல்லோரும் பலவித மனநிலையிலிருக்க, நிதானமாக சிம்மாசனத்திலிருந்தெழுந்த மன்னர் வீரவல்லாளன், “மாதப்பதண்ட நாயகரே, படைகள் தயாராகட்டும். எவ்வளவு விரைவில் கிளம்பமுடியுமோ அவ்வளவு விரைவில் கிளம்பி, நம் முந்தையதலைநகரை அடையட்டும். எல்லோருக்கும்முன்பாக முதலில் குதிரைப்படைகிளம்பி, நாளை மதியத்திற்குள் துவாரசமுத்திரத்தை அடையட்டும். இம்முறை ஹொய்சாலத்தின் வீரமெதுவென சுல்தானின்படைக்கு நாம் காட்டுவோம்.” என கர்ஜித்தார்.
மன்னர் அவ்வாறு கர்ஜித்துக்கொண்டிருந்த அதேசமயத்தில், காம்ப்லித்தேசம் நுழைந்த சுல்தானின்படைகள், எதிர்பட்டோரையெல்லாம் வெட்டிகொன்று, காம்ப்ளித் தேவனையும் வீழ்த்தி, அவனது தலைவெட்டி, ஈட்டியில் சொருகி, அப்படியும் அடங்காமல், அதேவேகத்தில், துவாரசமுத்திரத்திற்கு விரைந்து, அதன்எல்லையின் நெருக்கத்தில் பதுங்கியிருந்த பஹாவுதீன் குர்ஷாப்பையும், அவரதுகுடும்பத்தாரையும் சுற்றிவளைத்து கைதுசெய்தன. காப்பாற்ற வந்த குல்பர்க்காவின் வீரர்களை குத்திப்போட்டன.
அவர்களைக்கொன்ற கையோடு எல்லைக்காவலுக்கு நின்ற ஹொய்சாலப் படைவீரர்களையும் அம்பெய்திக்கொன்றன. அப்படியே அடாவடியாக கிராமங்களுக்குள்நுழைந்து, சிக்கியமக்களையெல்லாம் குடிசைக்குளடைத்து, தீயிட்டுக்கொளுத்திவிட்டு சென்றன. சிக்காது தப்பித்தோடிய ஜனங்களை ஈட்டியெய்தி சாகடித்தன. மூன்றுமணிநேரத்தில், மொத்தத்தையும் செய்துவிட்டு, கைதுசெய்தவர்களோடு காணாமல்போயின. இன்னும் பதினைத்து வருடங்களுக்கு தொடரப்போகின்ற மிகஅடத்தியான போர்மேகங்கள், அன்றைய தினத்திலிருந்து கருக்கொள்ள ஆரம்பித்தன.
(தொடரும்)
தொகுப்பு: குமரன் லோகபிரியா
The post ராஜகோபுர மனசு பகுதி 11 appeared first on Dinakaran.