அம்பிகை நிகழ்த்தும் அளவிலா வைபவம்

தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா

காமதாயினி நாமத்தின் தொடர்ச்சி…

இங்கு மஞ்சள் ஆற்றங்கரையில் தேவதானப்பட்டியில் அம்பாள் காமாட்சியாக இருக்கிறாள். என்னவொரு விசேஷமெனில், இந்தக் கோயிலில் உருவம் கிடையாது. அம்பிகை ஒரு குடிசைக்குள் இருந்து அருள்கிறாள். இதற்கு ஒரு ஐதீகம் சொல்லப்படுகின்றது. காஞ்சிபுரத்திலிருந்து அம்பிகையானவள் ஒரு மூங்கில் பெட்டிக்குள் வந்ததாகவும், ஒரு சில இடங்களில் குழந்தையாக வந்ததாகவும் சொல்கிறார்கள். சிலர் அது யந்த்ர சொரூபம் என்று சொல்கிறார்கள். அம்பாள் காஞ்சியிலிருந்து வந்து கொடைக்கானலுக்கு பக்கமிருக்கும் ஒரு இடத்திற்கு வந்ததாகவும், அங்கு ஒரு முனிவர் இந்த அம்பாளை உபாசனை செய்ததாகவும், அப்படி ஹரித்ரா நதியில் வரும்போது ஒரு மூங்கில் காட்டிற்கு நடுவே சிக்கி விட்டது, அங்கிருக்கும் மக்கள் அதை எடுக்கும்போது அம்பாள் அசரீரியாகப் பேசினாள்.

மூங்கில் அணைபோன்று தடுத்ததால், இந்த அம்பிகைக்கு மூங்கிலணை காமாட்சி என்று பெயர். ‘‘நான் இந்தப் பெட்டிக்குள் இருக்கிறேன். உக்கிரமாக இருப்பதால் இந்தப் பெட்டியை எடுத்து வைத்து ஒரு குடிசை மட்டும் அமைத்தால் போதும் என்று சொன்னாள். இன்றைக்கும் அந்தப் பெட்டியை வைத்து அதைச் சுற்றிலும் ஒரு குடிசை மட்டும் இருக்கும். அந்த குடிசை அமைத்து விட்டு அந்தக் கதவைப் பூட்டிவிட வேண்டும். நான் என்றைக்குமே உள்ள சாந்நித்தியமாக இருப்பேன். வெளியில் கதவுக்கு பூஜை செய்தால் போதும் என்று அசரீரியாகச் சொன்னாள்.

அதனால் ஸ்தூலமாகவே அம்பாள் இருப்பாள். இன்றும் வெளியிலிருந்துதான் பூஜைகள் நடக்கும். அம்பாள் தவத்தில் இருப்பதால் எந்த சப்தமும் இருக்காது. ஏன், தேங்காய் கூட உடைக்க மாட்டார்கள். தேங்காயும் வாழைப்பழத்தையும் முழுமையாகவே நிவேதனம் செய்து கொடுத்து விடுவார்கள். மேலே இருக்கிற குடிசையை மட்டும் குறிப்பிட்ட நாளில் அம்பிகையின் உத்தரவு கேட்டு மாற்றுவார்கள். அப்போது ஆச்சரியமான விஷயமொன்று நடக்கும். அந்தக்குடிசையை யார் மாற்ற வேண்டுமென்று உத்தரவு ஆகும். குடிசையை வேய்பவர் கண்களை கட்டிக் கொண்டுதான் மாற்றுவார்கள்.

காஞ்சிபுரத்தில் உருவமாக ரூபமாக இருக்கிறாள். இன்னொன்று சக்ரம் என்கிற அருவுருவமாக இருக்கிறாள். இந்த மூன்றையும் தாண்டி பிலாகாசமாக அம்பாள் இருக்கிறாள். அம்பாளின் மூல ஸ்தானத்திற்கு கீழே ஒரு குகை இருக்கிறது. அந்த குகைக்குள் அம்பாள் ஆகாச சொரூபமாக பிலாகாசினியாக இருக்கிறாள். இதேபோலத்தான் அம்பிகை தேவதானப்பட்டியிலும் குடிசைக்குள் அம்பாள் அருவமாக ஆகாச சொரூபிணியாக இருக்கிறாள். ஆனால் இங்கு ஸ்தூலமாகவே இருப்பதாகவும் அதை உபாசனையில் உள்ளவர்கள் உணர்வதாகவும் சொல்வது வழக்கம். காஞ்சியைப் போலவே ஆகாச சொரூபமாகவும், தவத்திலேயும் அம்பாள் இருப்பதாகவும் சொல்வார்கள். தேவதானப்பட்டி என்றாலே அந்த ஊரில் நிறைய யாக யக்ஞங்கள் நடந்ததாக சொல்வது வழக்கம். ராஜாக்களால் தானமாக அளிக்கப்பட்ட ஊர் இது என்று சொல்வது வழக்கம்.

மூங்கிலணை காமாட்சியின் மகத்துவத்தை மக்களுக்கு வெளிக்காட்டியவர் குழந்தையானந்த சுவாமிகள் என்கிற மகான் ஆவார். அவர் வத்தலகுண்டில் இருக்கும்போது அம்பாள் பிரத்யட்சமாக இருக்கிறாள். சென்று தரிசனம் செய்யுங்கள் என்றார்.

இதற்கு முந்தைய நாமங்களையெல்லாம் நாம் ஒரு வரிசை கிரமப்படி பார்த்துக் கொண்டே வருகிறோம். ஸுமேரு மத்யஸ்த ஸ்ருங்கஸ்தா… என்பதில் தொடங்கி ஸுதா சாகர மத்யஸ்தா… வரைக்கும் அம்பிகையினுடைய ஸ்தானத்தினுடைய (இருப்பிடத்தின்) விசேஷம் சொல்லப்பட்டது. காமாட்சி என்கிற நாமத்தில் அம்பிகையினுடைய நாமத்தின் விசேஷம் சொல்லப்பட்டது. காமதாயினி என்கிற நாமத்தை பார்க்கும்போது அம்பிகையினுடைய பிரபாவத்தை அந்த நாமம் நமக்கு காண்பித்துக் கொடுத்தது. இந்த நாமமானது அம்பிகையின் வைபவத்தை காண்பித்துக் கொடுக்கிறது. அதனால்தான் இந்த நாமம் எப்படி நிறைவாகிறது என்று பார்த்தால், தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா… என்றுதான் நிறைவாகின்றது. அதாவது இதற்கு முந்தைய நாமமானது பிரபாவத்தையும், இந்த நாமமானது வைபவத்தையும் காண்பித்துக் கொடுக்கிறது.

அதென்ன பிரபாவம். அதென்ன வைபவம். அவள் எல்லாவற்றையும் நமக்கு தரக் கூடியவளாக இருக்கிறாள். காமேஸ்வரனாகிய ஆத்ம சொரூபத்தையே நமக்கு தரக் கூடியவளாக இருக்கிறாள். தன்னையே நமக்கு தரக் கூடியவளாக இருக்கிறாள். கருணை மிகுந்த தாயாக இருக்கிறாள். காமதாயினி என்கிற நாமத்தில் இதெல்லாம் அம்பிகையினுடைய பிரபாவமாக வெளிப்படுகின்றது. இப்போது தாயாக இருக்கக்கூடிய அம்பிகையினுடைய பெருமையை அந்த நாமம் காண்பித்துக் கொடுத்தது. அந்தப் பெருமையை நாம் அனுபவிக்கிறோம் அல்லவா… அந்தப் பெருமையை நாம் அனுபவிக்கும்போது அது வைபவம் ஆகின்றது. அங்கிருந்து அது வெளிப்படும்போது அது பிரபாவமாக இருக்கிறது.

அம்பிகையின் பெருமையை நாம் (experience) அனுபவிக்கின்றோம். அந்த அனுபவம்தான் இங்கு விபவம் ஆகும். விபவம் என்றால் விசேஷமாகத் தோன்றுதல் என்று அர்த்தம். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஐந்து நிலைகளைச் சொல்லும்போது, பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று சொல்கிறோம். இந்த அவதாரங்களைத்தான் விபவம் என்று சொல்கிறோம். விபவம் என்றாலே விசேஷமாகத் தோன்றுதல் என்பதாகும். இப்போது அவதாரங்களெல்லாம் விசேஷமாகத் தோன்றுவதால் அவதாரங்களுக்கு விபவம் என்று பெயர். இப்போது, அம்பிகை இங்கு காமாட்சியாக இருக்கிறாள். காமதாயினியாக இருக்கிறாள்.

நாம் ஏதாவது விழா கொண்டாடினால், அதற்கு வைபவம் என்று சொல்கிறோம். ஏனெனில், விசேஷமாக ஒரு விஷயம் தோன்றி அதை நாம் அனுபவிக்கிறோம். கும்பாபிஷேக வைபவம் என்று சொல்கிறோம். ஏனெனில், கும்பாபிஷேகம் என்பது ஒரு விழா. அது முதலில் தோன்றுகிறது. பிறகு அது வெளிப்படுகிறது. அப்படி ஒரு கும்பாபிஷேகத்தை அனுபவிக்கிறோம். அப்படி அனுபவிக்கின்ற அந்த நேரத்தை நாம் வைபவம் என்று சொல்கிறோம். அதுபோல இங்கு அம்பிகையை அனுபவிக்கும் போது அது வைபவம். அது நித்ய வைபவம். அதனால்தான் வித்யா சம்பிரதாயத்தில் நித்ய பூஜைகளைச் சொல்லும்போது, நித்யோத்ஸவம் என்று சொல்வது வழக்கம்.

அப்படியாக, இந்த வைபவத்தை நாம் அனுபவிக்கிறோம் அல்லவா… இந்த வைபவத்தை முதல் நிலையில் நின்று யார் அனுபவிக்கிறார்கள் எனில், தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா… தேவர்கள், ரிஷி, கணாத, ஸங்காத, தூய மானாத்ம வைபவா… இப்போது தேவ என்று சொல்லும்போது தேவர்கள். ரிஷி என்று சொல்லும்போது ரிஷிகள். கணம் என்றால் தேவர்கள், ரிஷிகளுடைய கூட்டம். ஏதோ ஒருவரோ இருவரோ அல்ல. கூட்டம் கூட்டமான தேவர்கள். கூட்டம் கூட்டமான ரிஷிகள். ஸங்காத தூயமானாத்ம… அந்தக் கூட்டங்களெல்லாம் சேர்ந்து… தூயமானாத்ம… அம்பாளை ஸ்தோத்திரம் செய்கிறார்கள். தூய மான ஆத்ம வைபவா… அப்படி ஸ்தோத்திரம் பண்ணக்கூடிய ஒரு உயர்ந்த நிலையை, உயர்ந்த வைபவத்தை உடையவள். அது எந்தமாதிரி வைபவமெனில் சாதாரண வைபவம் இல்லை. ஆத்ம வைபவ… அது ஆத்ம வைபவமாக இருக்கிறது.

ஆத்ம வைபவம் என்று சொல்லும்போது இங்கு இரண்டு விஷயங்களை சொல்லலாம். ஒன்று இந்த வைபவத்தை தனக்கே உரியவள். தூயமானாத்ம வைபவா… அவளுக்குத்தான் உரியது இந்த வைபவம். இன்னொரு அர்த்தம் என்னவெனில், அவள் இந்த வைபவத்தால் உணரக்கூடிய இந்த ஆத்ம வஸ்துவாக இருக்கிறாள். அதனால் இது ஆத்ம வைபவம். இந்த ஆத்ம வஸ்துவை உணர்வதே ஒரு வைபவம்தான். அங்கு, Who am I – நான் யார் என்பது ஏதோ ஒரு கேள்வி என்கிற விஷயத்தில்தான் நாம் பார்ப்போம். ஆனால், உண்மையில் அதுவொரு வைபவம். ஆத்ம வஸ்துவை உணருவது என்பது ஒரு வைபவம். அதனால்தான், தூயமானாத்வ வைபவா… என்று அம்பாள் இருக்கிறாள். தேவர்களுடைய கூட்டங்களாலும், ரிஷிகளுடைய கூட்டங்களாலும், இவர்களெல்லாம் சேர்ந்து ஸ்துதி செய்யக்கூடிய உயர்ந்த ஆத்ம வஸ்துவாக விளங்கக் கூடிய அம்பிகை என்பது இந்த நாமாவினுடைய வெளிப் படையான அர்த்தம்.

இப்போது, இந்த நாமத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம் வாருங்கள். இதிலிருந்து நமக்கு என்ன உள்ளுணர்வு கிடைக்கின்றது என்று பார்த்தால், இந்த நாமத்திலுள்ள முதல் இரண்டு வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒன்று தேவ என்கிற வார்த்தை. இன்னொன்று ரிஷி என்கிற வார்த்தை. இதில் வெளிப்படையாகப் பார்த்தால் தேவர்களுடைய கூட்டம். ரிஷிகளுடைய கூட்டம் என்றுதான் நமக்குத் தெரியும். இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தை பார்க்கலாம்.

கொஞ்சம் நுட்பமாக பாருங்கள். இந்த தேவ என்கிற வார்த்தை இருக்கிறதல்லவா, இந்த தேவ என்கிற வார்த்தையினுடைய வேர்ச்சொல் இருக்கிறதல்லவா, மூலம் இருக்கிறதல்லவா… அதைப் பார்த்தோமெனில், அது திவ்ய என்கிற வார்த்தையிலிருந்துதான் வருவது தெரியும். இந்த திவ்ய என்கிற வார்த்தைக்கான அர்த்தம் என்னவெனில், ஒளி மிகுந்தது என்று அர்த்தம். அடுத்ததாக ரிஷி என்கிற வார்த்தை எங்கிருந்து வருகிறதென்று பாருங்கள். த்ருஷ்ட என்கிற வார்த்தையிலிருந்துதான் வருகின்றது. த்ருஷ்ட என்றால் பார்ப்பது என்று பொருள். அப்போது திவ்ய என்று சொல்லக்கூடிய ஒளி என்கிற வார்த்தையிலிருந்து, தேவ எனும் வார்த்தையும், ‘த்ருஷ்டம்’ என்று சொல்லக் கூடிய, பார்ப்பது (seeing) என்று சொல்லக்கூடிய வார்த்தையிலிருந்துதான் வந்தது. எனவே, ரிஷி என்கிற வார்த்தையின் மூலமே பார்ப்பது என்பதாகும். இப்போது இந்த இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது நமக்கு ஒரு விஷயம் தெரியும். ஒரு ஒளி இருக்கிறது. அந்த ஒளியை பார்க்கக்கூடிய ஒரு தன்மை இருக்கிறது. ஒளி இருந்தால், அந்த ஒளியை பார்க்கக்கூடிய ஒரு தன்மை இருக்க வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தை காண்பிக்கக் கூடியதற்கு நமக்கொரு ஒளி தேவை. அந்த ஒளி என்ன தெரியுமா?

(சுழலும்)

The post அம்பிகை நிகழ்த்தும் அளவிலா வைபவம் appeared first on Dinakaran.

Related Stories: