×

முக்தேஸ்வரா கோயில்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: முக்தேஸ்வரா கோயில், புவனேஸ்வர் நகரம், ஒடிசா மாநிலம்.

காலம் : சோமவம்சி வம்சத்தின் (பொ.ஆ.950-975) அரசர் யயாதி-I ஆல் கட்டுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பிரபல வரலாற்று ஆய்வாளரான ஜேம்ஸ் ஃபெர்குசன் (James Fergusson) தனது ‘இந்திய மற்றும் கிழக்கு கட்டிடக்கலையின் வரலாறு’ (History of Indian and Eastern Architecture – தொகுதி II – 1910) புத்தகத்தில் இக்கோயில் பற்றி `ஒரிசா கட்டிடக்கலையின் மதிப்புமிக்க மாணிக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். முற்றிலும் சிவப்பு மணற்கற்களால் ஆன இந்த 35 அடி உயர கோயில், அதன் அற்புதமான கட்டிடக்கலை, நேர்த்தியான சிற்பங்கள் மற்றும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது.

பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை (முக்தி) அளிப்பவராக `முக்தேஸ்வரர்’ என்று இவ்வாலய இறைவன் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் முன்புறத்தில் நம்மை வரவேற்கும் அலங்கார வளைவு வடிவ நுழைவாயில் (தோரணம்) ஒடிசா பகுதியில் உள்ள வேறு எந்த கலிங்க கட்டிடக்கலை கோயிலிலும் இல்லாத இந்த தோரணம், இக்கோயிலில் மட்டுமே அமைக்கப்பட்டதால் தனித்துவம் பெறுகிறது,இருபுறங்களிலும் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த தூண்கள் தாங்கி நிற்கும் அலங்கார நுழைவாயிலின் வளைவு மேற் பகுதியில் அழகிய அப்சரஸ்கள் ஒய்யாரமாக ஒருக்களித்து படுத்த வண்ணம் எழிலுறக் காட்சியளிக்கின்றனர். தூண்களின் வெளிப்புறங்களில் மணிகளின் மாலைத்தொங்கல்கள், அடிப்பகுதியில் அழகிய அப்சரஸ்கள், யாழிகளின் மீதமர்ந்த போர் வீரர்கள், மேற் பகுதியின் இருபுறங்களிலும் கஜ யாழிகள் என இத்தோரணம் ஒரு அற்புதக் கலைப் படைப்பாக விளங்குகிறது.

கருவறை முன் மண்டபத்தின் நுழைவாயில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வெளிப்புறத்தில் வடக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் பெரிய துளைகளுடன் கூடிய கல் ஜன்னல்கள் வடிவியல் அம்சங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் குரங்குகளின் விளையாட்டு சேஷ்டை சிற்பங்கள் கவர்கின்றன. வெளிப்புறச் சுவர்கள் அழகிய அப்சரஸ்கள், கங்கை, யமுனை, கஜலட்சுமி, ராகு, கேது (மூன்று / ஐந்து தலை நாகங்கள்) மற்றும் சிங்கங்களின் நேர்த்தியான சிற்பங்களால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இவ்வழகிய சிற்பங்களின் முகங்கள், முக்கிய அவயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. முன்புற சிற்றாலயங்கள் தெய்வங்கள் ஏதுமின்றி காட்சியளிக்கின்றன. ஆலயத்தின் பின்புறம் அழகிய குளமும் அமைக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post முக்தேஸ்வரா கோயில் appeared first on Dinakaran.

Tags : MUKDESWARA TEMPLE ,Mukteswara Temple ,Bhubaneswar City, Odisha State ,Somawamsi dynasty ,King ,Yayati-I ,James Fergusson ,
× RELATED மிருகசீரிடம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…