கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர். வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக் காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது என்றும், இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்டுகொள்வதே கிடையாது என்றும் பார்வையாளர்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கூறுகையில், ‘வண்டலூர் ஜிஎஸ்டி சாலையை ஒட்டியபடி உயிரியல் பூங்கா உள்ளது.
இதில், சாலை ஓரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில், இரும்பு சில்வர் தடுப்புகள் அனைத்தும் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் வயதானவர்கள் அதைப் பிடித்தபடி நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், செடிகள் முளைத்து காடுகள் போல் காட்சி அளிக்கிறது. மேலும், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் உள்ள பூங்காவின் சுற்று சுவரில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட வன விலங்குகளின் ஓவியங்கள் பொலிவிழந்தும், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்தும் அலங்கோல நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் பூங்காவின் நுழைவு வாயில் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான தள்ளுவண்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சவாரிக்காக வேன் மற்றும் ஆட்டோக்கள் மணி கணக்கில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை பூங்கா நிர்வாகத்தினர் கண்டுகொள்வதே கிடையாது. இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பார்வையாளர்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post பராமரிப்பின்றி காணப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா: நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.