தாம்பரம்: சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தட புறநகர் மின்சார ரயில் சேவையை தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சென்னையின் நுழைவாயிலாக உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள், நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் இந்த ரயில் சேவையை நம்பி உள்ளனர். இவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாம்பரம் ரயில் நிலையத்தை பொது மக்களின் வசதிக்கேற்ப மேம்படுத்த வேண்டுமென ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், கடந்த சில மாதங்களாக தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன் பயணிகளின் வசதிகளுக்காக புதிதாக 9 மற்றும் 10வது நடைமேடை அமைக்கப்பட்டது. அதேபோல், ரயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் உள்ள நடைமேம்பாலம் மூலம் விரைவு ரயில்களுக்கு செல்பவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் ரயில் நிலையத்தில் வடக்கு பகுதியில் புதிதாக நடைமேம்பாலம் அமைத்து தர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று 3 மற்றும் 4 நடைமேடைகளில் கிரேன் உதவியுடன் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக, நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தாம்பரம் – சென்னை கடற்கரை இடையயே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை வாங்குவதற்காக வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களில் ஏராளமானோர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ரயில் நிலையத்திற்கு வந்து, ரயில் இல்லை என தெரிந்தவுடன் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஆனால் சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் ரயில் நிலையம் வரை வந்த பொதுமக்கள் பின்னர் மீண்டும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து செங்கல்பட்டு பகுதிக்கு செல்வதற்கு ரயிலை பிடிப்பதற்கு எப்படி செல்வது என்று தெரியாமல் தவித்தனர்.
இதில் பெரும்பாலானோர் ரயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக நடந்தே சென்ற நிலையும் ஏற்பட்டது. ரயில்கள் ரத்தானதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் பேருந்தில் செல்வதற்காக கூடியதால் பல்லாவரம் முதல் பெருங்களத்தூர் வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக எம்டிசி சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அதில் பயணம் செய்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். இதனால், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் நெரிசல் ஏற்பட்டு, பல்லாவரம் – தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்து, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாக்கினார். 4 மணிக்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு, நெரிசலும் குறைய தொடங்கியது.
The post புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து எதிரொலி; பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் appeared first on Dinakaran.