×

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசு திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பாராட்டு


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆய்வு நடத்தினார். அப்போது, பணிகள் சிறப்பாக செயல்படுத்துவதாக அவர் பாராட்டு தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் குத்தம்பாக்கம், நேமம், கொசவன்பாளையம் ஆகிய ஊராட்சிகளிலும், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை, அயப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் சஞ்சய் குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒன்றிய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளம் வெட்டும் பணி, மரக்கன்றுகள் நடும் பணி, சாலை அமைக்கும் பணி, வீடுகள் கட்டும் பணி, கிராம ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், பள்ளி சுற்றுச்சுவர், மகளிர் சுய உதவி குழு கட்டிடங்கள் கட்டும் பணி, திடக்கழிவு மேலாண்மை திட்டம், விளையாட்டு திடல் அமைக்கும் பணி மற்றும் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் எஸ்.எஸ்.குமார், திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் வ.ராஜவேல், உதவி செயற்பொறியாளர் சங்கீதா, உதவி திட்ட இயக்குனர் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூந்தமல்லி க.வெங்கடேசன், ஞானேஸ்வரி, வில்லிவாக்கம் ராஜேந்திரன், வேதநாயகி, ஊராட்சிமன்ற தலைவர்கள் குத்தம்பாக்கம் ராஜசேகர், நேமம் பிரேம்நாத், கொசவன்பாளையம் அண்ணா குமார் அயப்பாக்கம் துரை வீரமணி மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின்போது, தமிழகத்தில், குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் சஞ்சய் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசு திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Tiruvallur district ,Rural Development Department ,Tiruvallur ,Poonamalli Panchayat… ,
× RELATED ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூட்டம்