நாகர்கோவில், ஜன.5 : குமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு பொது செயலாளர் மீரான் மைதீன், குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : குமரி மாவட்ட 54 வது எஸ்.பி.யாக பொறுப்பேற்றவுடன் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் குமரி மாவட்டத்தில் கந்துவட்டி வசூல் நடவடிக்கையும் அதிகமாக இருக்கிறது. கந்துவட்டி அதிகரிக்கும் போது ரவுடியிசமும் அதிகரிக்கிறது. கந்து வட்டி கும்பலால் வீடு, சொத்துக்களை இழந்து பலர் நிற்கதியாக தவித்து வருகிறார்கள்.
ஒரு சில பகுதிகளில் சம்பந்தப்பட்ட சரக காவல் நிலையங்களின் துணையோடு தான் கந்துவட்டி வசூல் நடக்கிறது. எனவே இந்த நிலையை களைவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி கும்பல் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். கந்துவட்டி தொடர்பான புகார்கள் காவல் நிலையங்களில் கிடப்பில் உள்ளன. இது போன்ற புகார்களை மறுவிசாரணை நடத்தி, நேர்மையான அதிகாரிகள் மூலம் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.
The post குமரி மாவட்டத்தில் கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை சிறுபான்மையினர் கூட்டமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.